பெரம்பலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயத்திரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 3 இடங்களில் செயல்முறை விளக்க பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயனடைய வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்  அறிவுறுத்தி உள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் காப்பறையில் காலாண்டு ஆய்விற்காக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான  கற்பகம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: வருகின்ற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பயிற்சி மற்றும் விழிப்புணர்வூட்டல் என்ற  பணிகளுக்காக வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்களித்த கட்சியின் சின்னத்தை உறுதிப்படுத்தும் விவிபேட் கருவியின் செயல்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.


அதன்படி, 59 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 59 வாக்களிக்கும் இயந்திரங்கள் மற்றும் 59 விவிபேட் கருவிகள் என மொத்தம் 177 இயந்திங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டு விழிப்புணர்வு பயிற்சிக்காக மஞ்சள் நிற ஸ்டிக்கர் ஓட்டப்பட்டு பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காப்பறையில் வைக்கப்பட்டது.




மேற்கண்ட இயந்திரங்கள் அனைத்தும் வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் வாக்களித்த கட்சியின் சின்னத்தை உறுதிப்படுத்தி கொள்வதற்காக உதவிடும் விவிபேட் கருவியின் செயல்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் தேர்தலின் போது வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்றும் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்திடுவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படும்.


இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், குன்னம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய மூன்று இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்க மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது. இந்த செயல்முறை விளக்க மையங்கள் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து அலுவலக நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும். பொதுமக்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விழிப்புணர்வு பெற்று பயனடைய வேண்டும் என தெரிவித்தார்.  இந்த நிகழ்வில். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மஞ்சுளா, தாசில்தார்கள் அருளானந்தம் (தேர்தல்), கோவிந்தம்மாள் (குன்னம்) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.