சூர்யா 42 திரைப்படத்தின் பிரமாண்ட பட்ஜெட்டிற்கு இயக்குனர்  ராஜமவுலி தான் காரணம் என, அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். 


பிரமாண்ட ப்ட்ஜெட்டில் ”சூர்யா 42”


சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில், பிரமாண்ட பொருட்செலவில் புதிய திரைப்படம் உருவாகிறது. பெயரிடப்படாத இந்த திரைப்படம் தற்போது வரை சூர்யா 42 என குறிப்பிடப்படுகிறது. வரலாற்று கதையை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ஞானவேல் ராஜா, சூர்யா 42 திரைப்படம் தொடர்பாக பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.


சூர்யாவின் பிரமாண்ட திரைப்படம்:


”சூர்யா நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகும் திரைப்படம் சூர்யா 42.  படத்தின் மோஷன் போஸ்டரை பார்த்த பின்பு, நான் சாதாரண படத்தை தயாரிக்கவில்லை என்பதை உணர்ந்தேன். இதுவரை சூர்யா நடிப்பில் வெளியான அதிகபொருட்செலவில் உருவான படங்களை காட்டிலும், புதிய படத்தின் பட்ஜெட் மூன்று மடங்கு அதிகமாகும். இது சூர்யாவிற்கு கூட  தெரியாது. தெரிந்தால் அவர் பீதி அடைவார். ரிஸ்க் எடுப்பதிலும் தயாரிப்பாளரை பாதிப்பதிலும் அவர் கவனமாக இருப்பார், குறிப்பாக என்னைப் பொறுத்தவரையில் கூடுதல் கவனமாக இருக்கிறார். அதனால், அவரிடம் இருந்து பட்ஜெட்டை மறைத்து விட்டோம். ஆனாலும், படத்திற்கான செட்டைப் பார்த்த பிறகு, காட்சி ரீதியாக நாம் பெரிய காரியத்தைச் செய்ய உள்ளோம் என்பதை சூர்யா புரிந்துகொண்டார்” என ஞானவேல் ராஜா தெரிவித்தார்.


”ராஜமவுலி தான் காரணம்”


தொடர்ந்து பேசிய ஞானவேல் ராஜா, தென்னிந்திய திரைப்படங்கள் பிரமாண்டமாக மாறுவதற்கான கதவை திறந்தது இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தான் காரணம் .அது புஷ்பாவாக இருந்தாலும் சரி, சூர்யா 42 ஆக இருந்தாலும் சரி அல்லது இங்கிருந்து வரும் எந்தப் படமாக இருந்தாலும் சரி, மும்பையில்  வரவேற்பை பெறுகிறது என்றால் அதற்கு ராஜமவுலி சார்தான் காரணம். அவர் பாகுபலி மாதிரியான படங்களை எடுக்கவில்லை என்றால், மும்பையில் எங்களுக்கு எதுவும் இருந்திருக்காது. சூர்யா 42 படத்தின் பெரிய பட்ஜெட்டுக்கு காரணம் ராஜமவுலி. அவர் எங்களுக்கான பாதையை அமைக்காமல் இருந்திருந்தால்,  எங்களால் இதைச் செய்ய முடியாது.


டிரெய்லர் எப்போது?


தொடர்ந்து, படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி இன்னும் இரண்டு வாரங்களில்  வரும் என்றும், படத்தின் டீசர் வரும் மே மாதம் வரும் என்றும் தயாரிப்பாளர் கே.ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் அனைத்து மொழி டீசர்களும் மே மாதம் வெளியாகும் என்றும், படம் குறித்த ஐடியாவை மக்களுக்குக் தரும் என்றும் கூறியுள்ளர்.


முன்னதாக சூர்யா 42 படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.  யூவி க்ரியேஷன்ஸ் -  ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சூர்யா - சிறுத்தை சிவா முதன்முறையாக இணையும் படம் சூர்யா - 42. பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில் தயாராகி வரும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். 


1000 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெறும் கதையாக இந்தப் படம் உருவாகும் நிலையில், வெண்காட்டார், முக்காட்டார், அரத்தர், மண்டாங்கர், பெருமனத்தார் உள்ளிட்ட 13 கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இந்தப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம்கட்ட படப்பிடிப்புகள் எண்ணூர் துறைமுகம், கேரளா, கோவா உள்பட பல இடங்களில் நடைபெற்றன. மேலும் சூர்யா 42 படப்பிடிப்பை வரும் ஏப்ரல் மாதத்தில் முடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.