இயக்குநர் பாலா இயக்கி வரும் வணங்கான் படப்பிடிப்பில் துணை நடிகை தாக்கப்பட்டதாக போலீசில் புகாரளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை கையாளும் முக்கியமான இயக்குநர்களில் பாலாவும் ஒருவர். அவர் தனது வர்மா படத்திற்கு பிறகு தற்போது வணங்கான் என்ற படத்தை இயக்கி வருகிறார். முதலில் இந்த படத்தில் நடிகர் சூர்யா, நடிகை கீர்த்தி ஷெட்டி நடிப்பதாக கடந்தாண்டு அறிவிப்பு வெளியானது. சூர்யாவின் 2டி நிறுவனமே இந்த படத்தை தயாரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் படப்பிடிப்பில் சூர்யாவுக்கும் பாலாக்கும் இடையே மோதல் நடந்ததாக கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதனைத் தொடர்ந்து டிசம்பர் 4 ஆம் தேதி வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகுவதாக அறிவிக்கப்பட்டது. கதையில் நடந்த சில மாற்றங்களால் சூர்யா விலகியதாக இயக்குநர் பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதற்கிடையில் வணங்கான் படப்பிடிப்பை தொடங்க பாலா தீவிரம் காட்டி வந்தார். அதன்படி இந்த படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் அருண் விஜய்யும், ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டிக்கு பதிலாக ரோஷினி பிரகாஷூம் நடிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கன்னியாகுமரியில் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.
இதற்காக கேரளாவில் இருந்து ஜிதின் என்பவர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு துணை நடிகர், நடிகைகளை வணங்கான் படப்பிடிப்பில் பங்கேற்க வைத்து வருகிறார். அப்படி வந்தவர்களில் துணை நடிகை லிண்டாவும் ஒருவர். மொத்தம் 3 நாட்களுக்கு 9 துணை நடிகர், நடிகைகளுக்கு சம்பளமாக ரூ.22, 600-ஐ ஜிதின் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனைக் கேட்கப் போன லிண்டாவை அவர் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் கன்னத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் லிண்டா கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சைப் பெற்றார். தொடர்ந்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார், இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.