தரமான நகைச்சுவை படங்களை தருவதில் கைதேர்ந்தவர் இயக்குனர் எழில். அது அவரது இன்றைய அடையாளம். ஆனால் முன்பு அவர் ஒரு சென்டிமெண்ட் இயக்குனர். துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு, பூவெல்லாம் உன் வாசம், ராஜா, அமுதே, தீபாவளி என ஒவ்வொரு விதமான சென்டிமெண்ட் படங்களை இயக்கியவர். 2007 ல் தீபாவளி படத்திற்கு பின் அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. எல்லாம் டிஜிட்டல் ஆகிவிட்டது. தமிழ் சினிமா அப்டேட் ஆகிவிட்டது என்பதை எழில் அப்போது அறியவில்லை. ஏன் நம்மை தேடி யாரும் வரவில்லை என்று யோசிக்கும் போது தான், 700 பேர் இருந்த இயக்குனர் சங்கத்தில் 2500 பேர் உறுப்பினராக அதிகரித்திருந்தனர். பதிவு செய்ய 2500 பேர் வெளியில் காத்திருந்தனர். இப்போது தான் அவருக்கு ஒன்று புரிந்தது. முன்பு நடிகர்களுக்கு ஆப்சன் இல்லை. மொத்தமே 9 அல்லது 10 இயக்குனர்கள் இருந்தார்கள், அவர்களை மாறி மாறி நடிகர்கள் நாடினார்கள். ஆனால் நிலை மாறிவிட்டது. அவர்களுக்கு ஆப்சன் நிறைய வந்துவிட்டது என்பதை எழில் உணர்ந்தார். நடிகர்களை தேடிச் சென்றால், அவர்களிடம் கால்ஷீட் இல்லை. இனி மார்க்கெட் உள்ள நடிகர்களை தேடிச் செல்வது பயனளிக்காது என்பதை அறிந்து கொண்டு, புது முகத்திற்கு கதை எழுதும் முயற்சியில் இறங்கினார். அப்படி 5 ஆண்டுகளுக்குப் பின் எழில் எழுதிய கதைய தான் மனம் கொத்தி பறவை. இன்றைய ப்ளாஷ்பேக் பகுதியில் மனம் கொத்தி பறவையை பார்க்கலாம்.




மனம் கொத்தி பறவை முதல் ஹீரோ சாந்தனு!


கதைக்கு புதுமுகம் தான் ஹீரோ என்பது உறுதியாகிவிட்டது. அது யார் என்கிற குழப்பம். குழப்பம் என்பது இயக்குனரிடத்தில் இல்லை. அவர் இயக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். யாராக இருந்தால் ரெடி என்கிற பாணியில். பெரும்பாலாலும் அறிமுகம் என வரும் போது அது தயாரிப்பாளர் ரிஸ்க். எனவே அவர்களே நடிகர்களையும் தேர்வு செய்வார்கள். அந்த வகையில் முதலில் ஒரு தாயாரிப்பாளரை சந்திக்கிறார் எழில். அவரும் கதையை ஏற்றுக்கொண்டு, பாக்யராஜ் மகன் சாந்தனுவை ஹீரோவாக ஒப்பந்தம் செய்ய சொல்கிறார். இயக்குனர் எழிலுக்கும் ஓகே. பேச்சு வார்த்தை தொடர்கிறது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தில் சாந்தனு அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. தயாரிப்பாளரும் விலகிவிட்டார். இதனால் மனம் கொத்தி பறவை முதல் முயற்சியிலேயே அந்தரத்தில் தொங்கியது. 




மனம் கொத்தி பறவை இரண்டாவது ஹீரோ குற்றாலீஸ்வரன்!


சரி, தயாரிப்பாளர் சென்று விட்டார் என்பதற்காக கதையை காயப் போட முடியுமா... இன்னொரு தயாரிப்பாளரை தேடுகிறார் எழில். நினைத்தபடி ஒருவர் கிடைக்கிறார். முன்பு சாந்தனுவை கிளிக் செய்தது, அந்த தயாரிப்பாளர். இந்த தயாரிப்பாளர் யாரை சொல்வார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம். அப்படி தான் கதை அவரிடத்தில் சொல்லப்பட்டது. அதை கேட்டதுமே தயாரிப்பாளருக்கு மகிழ்ச்சி. ஆனால் அவரது தேர்வு இந்த முறை சாந்தனு இல்லை. நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன். இது இயக்குனருக்கே ஷாக். இருந்தாலும், அவரும் பெமிலியர் பேஸ் என்பதால் படத்திற்கு அதுவும் ஒருவித சாதகம் என அதை இயக்குனர் ஏற்றுக்கொண்டார். முன்பு சொன்னது தான். எப்படியாவது படத்தை எடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருந்தார் எழில். இப்போது என்ன நடந்ததோ தெரியவில்லை. அந்த தயாரிப்பாளரும் விலகிக் கொண்டார். தயாரிப்பாளர் விலகிய பிறகு குற்றாலீஸ்வரன்? அவரும் தான்.




ஹீரோவை அறிமுகம் செய்த விஜய் டிவி ஷோ!


இரண்டு தயாரிப்பாளர்கள், இரண்டு ஹீரோக்கள் மாறியும் படம் முடிவாகவில்லை. இப்போது மீண்டும் தேடுதல் படலம். ஆஞ்சநேயா பிக்சர்ஸ் சதீஸிடம் கதை சொல்ல அவருக்கு பிடித்துவிட்டது. இப்போது ஹீரோ ஆப்சனை இயக்குனர் எழிலிடம் தருகிறார் தயாரிப்பாளர். யாரை போடலாம் என்கிற குழப்பத்தில் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த எழிலுக்கு வெளிச்சம் தந்தது விஜய் டிவி. சிவகார்த்திகேயனின் ஸ்பெஷல் காமெடி ஷோ அன்று ஒளிபரப்பானது. அதில் பல குரலில் பேசி, மாடுலேஷன் கொடுத்து சிவகார்த்திகேயன் பலரை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியை பார்த்து எழிலும் விழுந்து விழுந்து சிரித்தார். அப்போதே அவருக்கு சிவகார்த்திகேயன் தான் ஹீரோ என முடிவாகிவிட்டது. உடனே தயாரிப்பாளரை சந்தித்து கூறுகிறார். அவரும் அந்த நிகழ்ச்சியை பார்த்து சிரித்திருக்கிறார். அவருக்கும் சிவகார்த்திகேயன் மீது விருப்பம் இருந்திருக்கிறது. ஒருமித்த கருத்தோடு மனம் கொத்தி பறவையில் ஹீரோ ஆனார் சிவகார்த்திகேயன். 




நாலு சீனுக்கு நடிக்க வந்து நகைச்சுவை நடிகரான சூரி!


மனம் கொத்தி பறவை.... ஒரு பெரிய நட்சத்திர பட்டாளம் கொண்ட படம். ஏற்கனவே தீபாவளி படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்த சூரியை, இந்த படத்தில் ஒரு நான்கைந்து காட்சிகள் கொண்ட கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தார் எழில். முதல் காட்சி.... சூரியும்-சிவகார்த்திகேயனும் அட்ரஸ் கேட்க வேண்டும். இயக்குனர் சொன்ன டயலாக் ஒன்று. ஆனால் அங்கு அவர்கள் இருவருமே பேசி, நடித்த டயலாக் வேறு. எழிலுக்கு ஒரே ஆச்சரியம். அவர் சொன்னதை விட நன்றாக இருந்தது அந்த காட்சியும், டயலாக்கும். சிவகார்த்திகேயன்-சூரி காம்போ நன்றாக இருப்பதை உணர்கிறார். சூரியை அழைத்து, ‛இங்கே பாருப்பா.. உன்னை படம் முழுக்க போடலாம்னு இருக்கேன். நீ நல்லா பண்ற... ஆனால் சம்பளம் கூட கேட்காத... என்னால முடியாது...’ என எழில் கூற, ‛அண்ணே... சம்பளம் எல்லாம் பிரச்சினை இல்லைன்ணே... நீங்க எத்தனை நாள் வேணாலும் எடுத்துக்கோங்க... என்னை விட்றாதீங்க...’ என சூரி மகிழ்ச்சியில் ஒப்புக்கொண்டார். படத்தின் இணை தயாரிப்பாளர் என்கிற முறையில் எழிலுக்கு பட்ஜெட் மீதும் கவனம் இருந்தது. 




சுதந்திர பறவையாய் உருவான மனம் கொத்தி பறவை!


இயக்குனர்கள் சிங்கம்புலி, ரவி மரியா ஆகியோர் எழிலுக்கு நல்ல நண்பர்கள். சிங்கம்புலியை படத்தின் வசனங்களுக்காக வரவழைக்கிறார் எழில். ஏற்கனவே சொன்னது போல பட்ஜெட் படம். முடிந்த வரை சிக்கனம் காட்ட வேண்டும். அப்படியாக வசனத்திற்கு வந்தவரை இடைஇடையே நடிக்க வைக்க எடுத்த முயற்சி தான் ’மோடு முட்டி’ சிங்கம்புலி. படத்தில் பேசப்பட்ட கதாபாத்திரம். இந்த படத்தில் என்ன தான் எழில் இயக்குனராக இருந்தாலும்,அவர் சொல்லும் வசனங்களையும், காட்சிகளையும் ஓவர் டேக் செய்வதே அங்கிருந்தவர்களின் வழக்கமாக இருந்தது. அதற்கான சுதந்திரத்தை எழில் தந்தார் என்பது தான் உண்மை. அப்படி தான், ரவிமரியாவும்-சிங்கம் புலியும் தங்களது காட்சிக்கான வசனங்களை அவர்களே பேசிக்கொண்டனர். ‛வீட்டுல லவ் பேர்ட்ஸ் வளர்ப்பீங்க... நெசத்துல லவ் பிடிக்காதா...’ என்பது போன்ற வசனங்கள் எல்லாம் ஸ்பார்ட்டில் அவர்களே உருவாக்கியதாம். இப்படி தான் ஒவ்வொரு கலைஞரும் இயக்குனர் தந்த சுதந்திரத்தை எடுத்துக் கொண்டு சுதந்திர பறவையாய் பறந்து நடித்து வெளியானது தான் மனம் கொத்தி பறவை. பலரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த படம். இன்றும் என்றும் நகைச்சுவை பட்டியலில் நழுவாத படம். பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு  வசூலில் கொட்டோ கொட்டுனு கொட்டிய படம். 


 ப்ளாஷ்பேக் செய்திகளை படிக்க...


Flashback Gemini | ரீலுடன் திருப்பதியில் மொட்டை அடித்த ஏவிஎம் சரவணன்... ஓடாது... தேறாது என்ற ஜெமினி.. ஓ போட்ட கதை!


Flashback: எழுதியது வானத்தைப் போல... எடுத்தது சூர்யவம்சம்... ஜனகராஜ் கேட்டு சரத்குமார் நடித்த சூர்யவம்சம்!


Flashback: நீக்கப்பட்ட அஜித்... சேர்க்கப்பட்ட பிரசாந்த்... ICU சபதத்தில் உருவான ஆனந்தபூங்காற்றே!