அஜித் தானாக வந்தார், தானா வென்றார் என்கிற கதை எல்லாம் அனைவரும் அறிந்ததே. அவருக்கு உடலில் காயங்கள், அறுவை சிகிச்சைகள் இதுவும் அறிந்ததே. ஆனால் அது மட்டுமே அஜித் மீதான ஈர்ப்புக்கு காரணம் அல்ல. அவர் பெற்ற காயங்கள், அவருக்கு உடல் ரீதியாக மட்டுமல்ல மனரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நிறைய சிரமங்களை தந்தது. அதிலிருந்து மீண்டு வரத்தான் அவர் நிறைய போராடியிருக்கிறார். அப்படி ஒரு இக்கட்டான சூழலில் அஜித் சந்தித்த  மோசமான அனுபவமும், பின்னர் அதையே சவாலாக எடுத்து நடித்துக் கொடுத்த படம் தான் ஆனந்தபூங்காற்றே. அந்த படத்தில் பெரும்பாலும் அஜித் சோகமாகவே இருப்பார். கதாபாத்திரம்  காதல் தோல்வியில் அப்படி இருக்க வேண்டும். ஆனால் உண்மையிலும் அவருக்குள் சோகம் இருந்தது. ஒருவேளை அதனால் கூட அந்த கதாபாத்திரம் இன்னும் தத்ரூபம் பெற்றிருக்கலாம்.




அஜித்-கார்த்திக்-மீனா புக்கிங்!


1998 ல் அஜித்-சிம்ரனை வைத்து அவள் வருவாளா படம் எடுத்த ராஜ்கபூர், 1999ல் ஆனந்தபூங்காற்றே என்கிற படத்தை எடுக்க திட்டமிடுகிறார். சிவராம் காந்தியின் கதையை ராஜ்கபூர் இயக்க வேண்டும். ரோஜா கம்பைன்ஸ் சார்பில் காஜா மைதீன் தயாரிக்கிறார். படத்திற்கு முதலில் மூன்று பேரை தேர்வு செய்கிறார்கள். நாயகர்களாக நவரச நாயகன் கார்த்திக், ஆசை நாயகன் அஜித் இருவரும் இயக்குனரின் விருப்பம். இருவருமே அப்போது பரிட்சையமான நடிகர்கள், மார்க்கெட்டிங் கொண்ட நடிகர்கள் என்பதால் காஜா மைதீனும் ஓகே சொல்லிவிட்டார். படம் இரு கதாநாயகர்களை கொண்டது என்றாலும் கதையின் கரு, கதாநாயகியை சுற்றியது என்பதால் அதற்கு மீனாவை தேர்வு செய்கிறார்கள். அப்போது மீனா தான் ஹிட் படங்களின் நாயகி. அப்புறம் வழக்கம் போல ஒரு பெரும் படையே படத்திற்கு புக் செய்யப்படுகிறது. அஜித், கார்த்திக், மீனா உள்ளிட்ட அனைவருக்கும் அட்வான்ஸ் உள்ளிட்ட முதல் பரிசீலனைகள் நிறைவு பெற்றது. 




படுக்கையில் அஜித்... நெருக்கடி!


அஜித் அப்போது காயங்களால் அவதிப்பட்ட சமயம். விபத்துகளால் உடல் ரணமாகியிருந்தது. வரக்கூடாது என அவர் நினைத்த முதுகு தண்டு வலி, இப்போது வந்துவிட்டது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆனந்தபூங்காற்றே அறிவிப்பில் ஏற்கனவே கார்த்திக்-அஜித்-மீனா இருக்கும் விளம்பரங்கள் எல்லாம் செய்யப்பட்டாகிவிட்டது. இப்போது அஜித், படுக்கையில்! பணம் போட்ட தயாரிப்பாளருக்கு படத்தை உடனே எடுக்க வேண்டிய கட்டாயம். ஆனால் எந்த காரணத்தைக் கொண்டும் அஜித்தை மாற்றிவிடக்கூடாது என்பதில் இயக்குனர் ராஜ்கபூர் உறுதியாக இருக்கிறார். தயாரிப்பாளருக்கு நெருக்கடி ஏற்படாமல் இருக்க, கார்த்திக்-மீனா தொடர்பான காட்சிகளை படமாக்கத் தொடங்கினார். அது ஒருபுறம் போனாலும், இன்னொரு புறம் அஜித் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இந்த நிலையில் தான் தயாரிப்பாளர் ஒரு முடிவு எடுக்கிறார். 




மாற்றப்பட்ட அஜித்... கண்ணீரும் கவலையும்!


கார்த்திக் கால்ஷீட் கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாய். இப்போது அஜித் வந்தே ஆக வேண்டும். ஆனால் அவர் தீவிர சிகிச்சையில் உள்ளார். வேறு வழியே இல்லை. ஹீரோவை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை வருகிறது. ராஜ்கபூருக்கு அதில் விருப்பமில்லை. இருந்தாலும் தயாரிப்பாளர் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். இப்போது பிரசாந்த்திடம் பேச்சு வார்த்தை நடக்கிறது. அவரும் ஓகே சொல்ல, அட்வான்ஸ் தரப்பட்டு, புதிதாக ஒரு விளம்பரம் வருகிறது. கார்த்திக்-பிரசாந்த்-மீனாவை வைத்து ஆனந்தபூங்காற்றே. என்ன ஆயிற்று அஜித்துக்கு என இன்டஸ்ட்ரீயே முணுமுணுக்கிறது. சிகிச்சையில் இருக்கும் அஜித்திற்கும் இந்த தகவல் செல்கிறது. அதுவரை பெற்ற சிகிச்சையின் வலியை மிஞ்சுகிறது, அந்த செய்தி தந்த வலி. கண்ணீர் மல்க படுக்கையில், யாருடனும் பகிர முடியாத சோகத்திற்குச் செல்கிறார் அஜித். இனி எப்படி இருக்கும் நம் சினிமா வாழ்வு... என்கிற பயமும் இருக்கத்தான் செய்திருக்கும்.




திடீர் திருப்பம்... விலகிய பிரசாந்த்!


இதற்கிடையில் பிரசாந்த் தொடர்பான படப்பிடிப்பு தொடங்கும் முன் கால்ஷீட் பிரச்சினையில் பிரசாந்த் படத்திலிருந்து விலக முடிவு செய்கிறார். இப்போது வேறு ஒருவரை தேட வேண்டிய கட்டாயம். பலரிடம் பேசியும் பெரிய திருப்தி இல்லை. ‛சார்... அஜித்தையே போடலாம்...’ என இயக்குனர் ராஜ்கபூர் சொல்ல. ‛அவருக்கு உடம்பு சரியில்லையே...’ என காஜா மைதீன் கூறியிருக்கிறார். ‛வாங்க சார் பார்த்துட்டு வருவோம்...’ என ராஜ்கபூர் சொல்ல, இருவரும் புறப்படுகிறார்கள். படுக்கையில் இருந்த அஜித், இயக்குனரை கண்டதும் கண் கலங்குகிறார். ‛என்ன பாஸ்... நீங்க என்னோட குளோஸ் ப்ரெண்ட்... நீங்களே இப்படி பண்ணிட்டீங்களே...’ என மனம் வருந்தியிருக்கிறார். ‛இல்லப்பா... இப்போ வரை நீ தான் வேணும்னு நான் உறுதியா இருக்கேன். அதனால் தான் வந்திருக்கேன்...’ என ராஜ்கபூர் சொல்ல, ‛கவலைப்படாதீங்க பாஸ்... ஒரு 15 நாள் வெயிட் பண்ணுங்க... கண்டிப்பா வந்திடுவேன்... நாம தான் படம் பண்றோம்,’ என கெத்தாக உறுதியளித்தார் அஜித். 




மருத்துவமனை டூ மவுண்ட் ரோடு வந்த அஜித்!


உடன் வந்த தயாரிப்பாளரும், ‛இந்தாப்பா இதை வெச்சுக்கோ... இது சம்பளம் இல்லை; உன் சிகிச்சைக்கு வெச்சுக்கோ,’ என ரூ.1 லட்சத்தை அஜித்திடம் கொடுத்தார் காஜா மைதின். சொன்னபடி 15வது நாளில் சிகிச்சையிலிருந்த நேராக சூட்டிங் ஸ்பார்ட் வந்தார் அஜித். முதல் நாள் சூட்டிங், மவுண்ட் ரோட்டில் ‛உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலச்சேன்...’ பாடல். டபுள் டக்கர் பஸ்ஸில் மேலே இருந்து அஜித் ஆட வேண்டும் என்கிறார் நடன இயக்குனர் ராஜூ சுந்தரம். ‛யோவ்... இப்ப தான்ய்யா அவன் ட்ரீட்மெண்ட் முடிச்சு வந்திருக்கான்... இப்போ போய் நீ மேலே ஏறச் சொல்ற...’ என இயக்குனர் எதிர்ப்பு தெரிவிக்க, ‛பரவாயில்ல நான் பண்றேன்...’ என பஸ் மீது ஏறி உதயம் தியேட்டர் பாடலில் இதயத்தில் நுழைந்தார் அஜித். பாட்டு முடிந்த கையோடு சண்டைக்காட்சி. ‛கால் தூக்கும் படியான எந்த சண்டைக்காட்சியும் வைக்க வேண்டாம்’ என்கிறார் இயக்குனர், ‛இல்லை இல்லை... அவங்க விருப்பத்திற்கு வைக்கட்டும்...’ என திட்டமிட்ட அனைத்து சண்டைக் காட்சியையும் முடித்துக் கொடித்தார் அஜித். எந்த காம்ப்ரமைஸூம் இல்லாமல், இயக்குனர் திட்டமிட்டபடி முடிந்தது ஆனந்தபூங்காற்றே படம். அஜித்தை பி அண்ட் சி ஆடியன்ஸிடம் கொண்டு சென்றதில் முக்கிய பங்கு வகித்த படம். நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கு நல்ல வெற்றியையும், இயக்குனருக்கும்அவரது நம்பிக்கையையும், அஜித்திற்கு மீண்டு வரும் சக்தியையும் தந்தது ஆனந்தபூங்காற்றே!