ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர்  மணிவாசகம். இவர் பரமக்குடி பஜார் பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் விக்னேஷ், பட்டதாரியான இவர் ஆடம்பரமாய் வாழ்வதற்கு ஆசைப்படுபவர். மேலும் ஒரு விளம்பர பிரியர்  இதற்காக மதுரை, சென்னை போன்ற ஊர்களுக்கு சென்று அங்கு உள்ள முக்கிய நபர்களிடம் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வார். அவருடன் நெருங்கிப் பழகி புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். 




மேலும், அப்படி பழகும் முக்கிய பிரமுகர்களுடன் நம்பிக்கையோடு இருந்து பழகி  அவர்களது இல்லங்களில் நடைபெறும் முக்கிய விழாக்களில் பங்கு கொண்டு புகைப்படங்களாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து தன்னை பிரபலப்படுத்திக்கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இப்படி பங்குகொள்ளும் சில இல்ல விழாக்களில் தனது கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளார். 




உதாரணத்திற்கு  சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் நடந்த ஒரு  போலீஸ் உயரதிகாரி மகள் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற விக்னேஷ் அவரது மகள் கழுத்தில் கிடந்த வைர நெக்லஸை அபேஸ்  செய்துள்ளார். விஷயம் அறிந்த காவல்துறையினர் அப்போது அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின்னர் ஜாமீனில் வெளிவந்த விக்னேஷ் தொடர்ந்து முக்கிய பிரமுகர்களிடம்  தனது கைவரிசையை காட்டியுள்ளார். 




'நான் ஜெயிலுக்கு போறேன்' ஜெயிலுக்குப் போறேன்'


இதில் வேடிக்கை என்னவென்றால், செய்தித்தாள் மற்றும் ஊடகங்களில்  இவரைப்பற்றி வரும்  செய்திகளை இவரே சமூக வலைதளங்களில்  பதிவிட்டு இவரே  விளம்பரம் தேடிக் கொள்வார்.  இவர் செய்த களவானித்தனத்தால்  மதுரை, சென்னை, சிவகங்கை உள்ளிட்ட  ஊர்களில் உள்ள காவல் நிலையங்களில் இவர் மீது வழக்குகள் உள்ளன. ஆனால் தன் மீது வழக்குகள் உள்ளதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் தனது புல்லட்டில் பந்தாவாக பரமக்குடியில் வலம் வருவார். சமீபத்தில் நடிகர் சூரி மற்றும் அவரது குடும்பத்தினருடன் நெருக்கமாக பழகி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். 




இந்நிலையில்தான்  மதுரையில் நடைபெற்ற நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமண விழாவில்  10 பவுன் நகை திருடு போனது.  இது குறித்து தனிப்படை அமைத்த மதுரை காவல்துறையினர் மண்டபத்தில் இருந்த CCTV  காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் விக்னேஷின் செயல் காவல்துறையினரை சந்தேகிக்க வைத்தது. இதுகுறித்து விசாரிக்க மதுரை தனிப்படை போலீசார் பரமக்குடியில் உள்ள விக்னேஷின் வீட்டிற்கு நேற்று இரவு வந்துள்ளனர். அங்கு அவரது பெற்றோரிடம் விக்னேஷ் எங்கே என்று காவல்துறை கேட்டதற்கு பெற்றோரோ அவன் வீட்டில் இல்லை என மறுத்துள்ளனர். பிறகு வீட்டிற்குள் அதிரடியாய் புகுந்த காவல்துறையினர் அங்கு தனி அறையில் ஒளிந்திருந்த விக்னேஷை கைது செய்தனர். பிறகு அவனிடம் நடத்திய விசாரணையில் 10 புவுன் நகை  திருடியதை விக்னேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். 




இதனையடுத்து மதுரை கொண்டு சென்ற காவல்துறையினர் அங்கு விக்னேஷை விருந்து கொடுத்து விசாரித்து வருகின்றனர். நன்கு வசதியான குடும்பத்தில் வசதியாக வாழ்ந்து வரும் விக்னேஷ் பொழுது போக்கிற்காகவும் தனது சுய விளம்பரத்திற்காகவும் இது போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது மாவட்ட  மக்களிடையே ஆச்சரியத்தையும் பரபரப்பையும்   ஏற்படுத்தி உள்ளது.


'இதுக்கு ஏண்டா வெள்ளையும் சள்ளையுமா தெரியனும்'




பரமக்குடியில் ஒரு நகைக் கடை உரிமையாளருக்கு மகனாய் பிறந்து பங்களாவில் வாழ்ந்து வரும் இந்த நாகரிக களவாணி தொடர்ந்து விஐபிகள் வீட்டில் திருடி அதன் மூலம் பிரபலமடைந்த விடலாம் என்ற சைக்கோதனத்தினால், இது போன்ற காரியங்களில் தான் ஈடுபட்டு வருவதாக இவரிடம் விசாரணை  நடத்திய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 'புல்லட்டுலயே வருவானய்யா அவனா களவாணிப்பய' இதுக்கு ஏண்டா வெள்ளையும் சல்லையுமா தெரியனும்' நாட்டில் எத்தனையோ களவாணிப்பயலுகளையும் திருட்டுப்பயலுகளையும்  நாம பாத்துருக்கோம், ஆனா, இவன  மாதிரி  திருடன நாங்க  இதுவரைக்கும் பார்த்ததில்லையப்பூ' என பரமக்குடி பொதுமக்கள் வியக்கின்றனர்.