ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் உலகம் முழுவதும் வரும் 10-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
அமெரிக்காவில் இப்போதே டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி விட்டன.
தமிழ்நாட்டில் 1,152 திரைகள் இருப்பதாகவும், அனைத்து தியேட்டர்களிலும் ஜெயிலர் படத்தை திரையிட ஆர்வமாக இருப்பதாகவும், இதற்கு ரஜினிகாந்த் ஆவன செய்ய வேண்டும் என்றும் தியேட்டர் உரிமையாளர் சங்கம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதிகாலை 6 மணிக்கு சிறப்பு காட்சியாக ஜெயிலர் படம் திரையிடப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சிறப்பு காட்சி இல்லை என்றும், முதல் காட்சி காலை 9 மணிக்கே தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஏற்கனவே விஜய்யின் வாரிசு, அஜித்குமாரின் துணிவு படங்களுக்கு சிறப்பு காட்சிகள் திரையிட அரசு அனுமதி அளித்து இருந்தது. ஆனால் விடுதலை, பொன்னியின் செல்வன் 2, மாமன்னன், மாவீரன் உள்ளிட்ட பெரிய படங்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஷாக்கி ஷெராப், விநாயகன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான 'அண்ணாத்த' படத்திற்கு பிறகு ரஜினியின் நடிப்பில் வெளியாகும் படம் ஜெயிலர். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்தின் படம் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற டார்க் காமெடி படங்களை இயக்கிய நெல்சனுடன் ரஜினி முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கழுகை காகத்துடன் ஒப்பிட்டு ஒரு குட்டிக்கதை கூறி இருந்தார். இதன் மூலம் அவர் நடிகர் விஜய்யை தாக்கி பேசியுள்ளதாக கூறி விஜய் ரசிகர்கள் கொந்தளித்து வரும் நிலையில், ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்று ரஜினியின் ரசிகர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். இப்படி ரஜினிகாந்த் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ளது.
மேலும் படிக்க,