Haryana Clash: ஹரியானா மாநிலம் நுஹ் மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.


திடீரென வெடித்த மோதல்:


ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மனோகர் லால் கட்டார் இருந்து வருகிறார். இந்நிலையில், அம்மாநிலத்தில் தற்போது பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அதாவது, ஹரியானா மாநிலம் நுஹ் மாவட்டத்தில் இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி கேட்லா மோட் பகுதியில் நடந்துக் கெண்டிருக்கும்போது,  இளைஞர்கள் குழு ஒன்று பேரணியை தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது.  இதனால் அங்கு இருதரப்பினருக்கும் இடைய பெரும் மோதல் வெடித்தது. ஒருவரைக்கொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டு, வாகனங்களுக்கு தீ வைத்தனர்.  மேலும், போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைத்து எரித்துள்ளனர்.   இந்த மோதல் தொடர்ந்து வன்முறையாக மாறியது.  இந்த சம்பவம் குருகிராம்-ஆல்வார் தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.


144 தடை உத்தரவு:






போராட்டக்காரர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 ஊர்க்காவல் படை வீரர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கலவரத்தால் சுமார் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கலவரம் கட்டுக்கடங்காமல் போனதை அடுத்து, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்துள்ளனர். இந்த வன்முறையை தொடர்ந்து அந்த மாவட்டத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் நுஹ், குருகிராம், பல்வால், ஃபரிதாபாத் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இணைய சேவையும் துண்டிக்கப்பட்டிருப்பதோடு,  குருகிராம், ஃபரிதாபாத் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.


தவிக்கும் 2,500 பேர்






இதற்கிடையில், பேரணியில் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்டோர் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் காவல் நிலையம், கோயில்களில் தஞ்சமடைந்துள்ளர். சுமார் 2,500 பேர் செல்ல இடமின்றி தவித்து வருகின்றனர்.  எனவே நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நூவை சுற்றியுள்ள மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது, குர்கான், ஃபரிதாபாத், பல்வால் ஆகிய மாவட்டங்களல் ஆயிரத்திற்கும்  மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


வடகிழக்கு இந்தியாவும், வட இந்தியாவுக்கு கலவர பூமியாக மாறி வருகிறது. முதலில் மணிப்பூர் வன்முறை இரண்டு  மாதங்களுக்கு மேல் தொடர்ந்து, கொடூர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. இன்னும் அங்கு நிலைமை கட்டுக்குள் வராத நிலயில், தற்போது ஹரியானா மாநிலத்தில் புது கலவரம் ஒன்று வெடித்துள்ளது.