வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று வரை 6.5 கோடிக்கும் அதிகமானோர்,  தங்களது கணக்கு விவரங்களை தாக்கல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வருமான வரித்துறை அறிக்கை:


நடப்பு நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது, இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “நேற்று மாலை 6 மணி வரையில் 6.5 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் 36 லட்சத்து 91 ஆயிரம் பேர் நேற்று தாக்கல் செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் வருமான வரி தாக்கல் செய்யும் இணையதள முகவரியை நேற்று ஒரே நாளில் ஒரு கோடியே 78 லட்சத்திற்கும் அதிகமானோர் அணுகியுள்ளனர். வரி செலுத்துதல் மற்றும் பிற தொடர்புடைய சேவைகளுக்கு வரி செலுத்துபவர்களுக்கு உதவ, எங்கள் ஹெல்ப் டெஸ்க் 24x7 அடிப்படையில் செயல்படுகிறது.


மேலும் அழைப்புகள், நேரலை அரட்டைகள், WebEx அமர்வுகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமும் உதவியை  வழங்குகிறோம். இந்த மைல்கல்லை அடைய எங்களுக்கு உதவிய வரி செலுத்துவோர் மற்றும் வரி நிபுணர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் நடப்பு நிதியாண்டிற்கான வருமான வரியை  தாக்கல் செய்யாத அனைவரையும் ஐடிஆர் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் ” என குறிப்பிடப்பட்டுள்ளது.


புதிய உச்சம்:


கடந்த நிதியாண்டில் ஜுலை 31ம் தேதி முடிவில் 5 கோடியே 83 லட்சம் பேர் வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்து இருந்தனர். ஆனால், நடப்பு நிதியாண்டில் அது 6 கோடியே 50 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளகவே வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே, நடப்பு நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்க முடியாது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அபராதம் மற்றும் சிறைவாசம்:


ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரியை தாக்கல் செய்ய தவறினால் ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும். மேலும், ஒருவரது வருமானம் 5 லட்சத்திற்கும் மிகாமல் இருந்தால் அவர் 1,000 ரூபாய்  மட்டும் அபராதம் செலுத்த வேண்டும். ஒரு நபர் 25 லட்சத்திற்கும் அதிகமான வரியை செலுத்த வேண்டி இருந்தால், அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்படும்.  மேலும் வரியை செலுத்தும் வரை அந்த தொகைக்கு ஒவ்வொரு நாளும் 200 ரூபாய் வட்டியும் வசூலிக்கப்படும்.


எந்த ஐடிஆர் படிவம் தாக்கல் செய்ய வேண்டும்?



  • ஆண்டு சம்பளம், வீடு உள்ளிட்ட சொத்து, பிற முதலீடுகள் மூலம் கிடைக்கும் வட்டி உள்ளிட்ட மொத்த வருமானம் ரூ.50 லட்சம் வரை உள்ளவர்கள் ஐடிஆர் 1 தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • எந்தவொரு வணிகள் அல்லது தொழிலை மேற்கொள்ளாத தனிநபர்கள் ஐடிஆர் 2 தேர்ந்தெடுக்க வேண்டும். 

  • வணிகம் அல்லது தொழில் மூலமாக வருமானம் ஈட்டும் தனிநபர்கள் ஐடிஆர் 3 படிவத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • ஐடிஆர்4, சிறிய மற்றும நடுத்தர வரி செலுத்துவோர் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தும் எளிய வரி தாக்கல் படிவமாகும். இதை தனிநபர்கள், HUF, நிறுவனங்கள் பயன்படுத்தலாம். 

  • LLP மற்றும் வணிக அமைப்புகள் ஐடிஆர் 5 பயன்படுத்தலாம். 

  • ஐடிஆர் 6 படிவத்தை நிறுவனங்களால் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.


தேவையான ஆவணங்கள்:


வங்கி கணக்கு விவரங்கள், பான் கார்டு, ஆதார் கார்டு, சம்பளம் பெறும் நபர்களுக்கான படிவம் 16, முதலீட்டு குறித்த, ஆதாரங்கள், வீட்டுக் கடன் வட்டி சான்றிதழ், இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்திய ரசீதுகள் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.