Chennai Metro Rail: சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து எளிதாக பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ய இ-ஆட்டோ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


சென்னை மெட்ரோ ரயில்:


சென்னையில் உள்ள போக்குவரத்துகளில் மிகவும் முக்கியமானது இந்த மெட்ரோ ரயில் சேவை. நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் நிலவும் இந்த போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. 


அதேபோல், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மறு வழித்தடமும் உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்கான பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது. 


இ-ஆட்டோ சேவை:


அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு இ-ஆட்டோ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. பயணிகள் மெட்ரோ ரயிலில் இருந்து வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்ல ஆட்டோக்கள், ஊபர், ஓலா போன்ற சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுடைய பயணத்தை எளிதாக்கும் விதமாக, மெட்ரோ ரயில் நிர்வாகம் எலக்ட்ரிக் ஆட்டோ திட்டத்தை தொடங்கியது. ரயில் நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளில் 5 கிலோ மிட்டருக்கு இந்த சேவை வழக்கப்படுகிறது. இந்த சேவையை லெக்கோ (LEGG0) என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து மெட்ரோ ரயில் நிர்வாகம் செயல்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக ஆலந்தூர், செயிண்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் மதுரவாயில்  இயக்கப்பட்டன. ஒரு கிலோ மீட்டருக்கு 20 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதம் முழுவதும் பயணிப்போருக்கு 20 சதவீத கட்டண சலுகையும், கூகுள்பே, போன்பே மூலம் செலுத்துவோருக்கு 10 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


விரிவாக்கம்:


இந்த சேவை பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இதனை விரிவுப்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது, இந்த இ-ஆட்டோக்களை அனைத்து மெட்ரோ நிலையங்களுக்கும் கொண்டு செல்ல மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது சில இடங்களில் மட்டுமே இந்த சேவை உள்ளது. இதனை விரிவுப்படுத்தி அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இந்த இ-ஆட்டோ சேவையை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நீங்கள் உள்ள பேருந்து நிலையம், மின்சார ரயில் நிலையத்தில் இருந்து எளிதாக மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்ல முடியும். 


அண்மையில் வந்த வசதி:


சமீபத்தில் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் எடுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நேரடி பயணச் சீட்டை பெற்றுக் கொள்ளும் முறை, பயண அட்டை, க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி பயணிக்கும் முறை ஆகிய வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.