பூமியின் நீள்வட்டப்பாதையில் சுற்றிய நிலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் சந்திரயான் 3 நிலவு பாதையில் நுழைந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 18 நாட்களுக்கு பின், சந்திரயான்-3 நிலவுக்குச் செல்லும் பாதையில் நுழைந்துள்ளது.
சந்திரயான் 3 விண்கலம்:
சந்திரயான் 3 விண்கலம் கடந்த 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அடுத்ததாக, 40 நாட்கள் பயணம் செய்து ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை 5.47 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் கட்டமாக, விண்கலம் புவியின் தரைப்பரப்பில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றதும், அதற்கு ஒரு உந்துதல் வழங்கப்பட்டு புவியின் நீளவட்டப்பாதையில் சுற்ற வைக்கப்பட்டது. 15 நாட்கள் ஒவ்வொரு 170 கிலோ மீட்டருக்கு உந்துதல் வழங்கப்பட்டு தற்போது டிரான்ஸ் லூனார் ஆர்பிட் எனப்படும் நிலவு பாதையில் நுழைந்துள்ளது.
நிலவு பதையில் சந்திரயான் 3:
நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இன்று அதிகாலை 1 மணிக்குள் இந்த நிகழ்வு நடந்துள்ளது. இந்த செயல் பெங்களூருவில் இருக்கும் இஸ்ரோவால் கண்காணிக்கப்பட்டது. நிலவின் பாதையில் நுழையும் போது சந்திரயான் 3 தனது அதிகபட்ச உந்துதல் சக்தியை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Trans Lunar Injection என்பது விண்கலத்தை பூமியின் நீள்வட்டப்பாதையில் இருந்து குறிப்பிடத்தக்க நிலவு பாதையில் அமைப்பது ஆகும். விண்கலத்தில் இது ஒரு முக்கியமான கட்டமாகும். இந்த கட்டம் தற்போது வெற்றியடைந்த நிலையில், அடுத்தடுத்த கட்டங்கள் அனைத்தும் சவாலானது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இஸ்ரோ பதிவிட்டுள்ள டிவீட்டில், “ பூமியின் சுற்றுவட்டார பாதையில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு, நிலவின் பாதையில் நுழைந்துள்ளது சந்திரயான் 3. அடுத்த நிறுத்தம் நிலவு தான். மேலும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி சந்திரயான் 3 நிலவின் புவிவட்டார சுற்றுப்பாதையில் நுழைந்து அதன் பயணத்தை தொடரும்” என பதிவிட்டுள்ளது.
சவாலான இறுதி கட்டங்கள்:
இதனை தொடர்ந்து பல சவாலான கட்டங்களை சந்திரயான் 3 கடக்க உள்ளது. முக்கியமாக விண்கலம் பயணிக்கும் நீள்வட்டப் பாதையின் உயரத்தை சிறிது சிறிதாக குறைத்து, நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் விண்கலத்தைக் கொண்டு வந்து நிலைநிறுத்துவதோடு, அதே தொலைவில் நிலவை சுற்ற வைப்பது முக்கிய கட்டமாகும். மேலும் விண்கலத்தில் புரபல்சன் மற்றும் விக்ரம் என்ற லேண்டர் என்ற இரண்டு முக்கியப் பகுதிகள் உள்ளன. அந்த லேண்டரில்தான் ரோவர் கருவியும் அமைந்துள்ளது. தரையிறக்கத்தின் போது உந்துவிசை கருவியையும், லேண்டரையும் தனியாக பிரிக்க வேண்டியுள்ளது. அப்படிப் பிரித்து, லேண்டரை அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் முதல் குறைந்தபட்சமாக 30 கிலோமீட்டர் வரை நீள்வட்டப் பாதையில் செலுத்துவார்கள். லேண்டரின் கீழே நான்கு குட்டி ராக்கெட்டுகள் உள்ளன. அந்த ராக்கெட்டுகளின் உதவியுடன், லேண்டரை மெல்ல மெல்லத் தரையிறக்க வேண்டும். இது வெற்றிகரமாக நிகழ்ந்தால், சந்திரயான் 3 நிலவின் அதன் ஆராய்ச்சி தொடங்கி தரவுகளை வழங்கும்.