பூ, களவாணி ஆகிய படங்களுக்கு இசையமைத்தவரும், தேநீர் விடுதி, கேரள நாட்டிளம் பெண்களுடனே ஆகிய படங்களை இயக்கியவருமான எஸ்.எஸ்.குமரன் இயக்குநர் விக்னேஷ் சிவனின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
‘சட்டத்துக்கு புறம்பானது’
“விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு LIC என்று பெயரிட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன். காரணம் LIC என்கிற பெயரை 2015ஆம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான சுமா பிச்சர்ஸின் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.
இதை அறிந்த விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தப் பெயரை தரக்கோரி தனது மேலாளர் மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார். ஆனால் LIC என்கிற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன்.
‘சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயல்’
ஆக இந்தத் தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதை விக்னேஷ் சிவன் நன்றாக அறிவார். அப்படி இருந்தும் இந்த தலைப்பை அவர் தனது படத்திற்கு வைக்கிறார் என்று சொன்னால், அது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல எளிய, சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயலாகும். இச்செயல் முழுக்க முழுக்க அதிகாரத் தன்மை கொண்டது. அவரின் இந்த செயலுக்கு நியாயம் கேட்டு ஊடகத்திற்கு முன் நிற்கிறேன்.
LIC என்கிற தலைப்பு என்னிடம் மட்டுமே இருப்பதால் அதை விக்னேஷ் சிவன் தன் படத்தில் எந்த விதத்திலும் பயன்படுத்தக்கூடாது என்று இதன் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன். இனியும் இச்செயலை விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்” என எஸ்.எஸ். குமரன் தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்க, பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் தயாராகும் திரைப்படம் எல்.ஐ.சி.
விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்கும் நிலையில், யோகிபாபு, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை குறித்த படங்கள் நேற்று தான் வெளியாகின. படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நேற்று இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இசையமைப்பாளரும் இயக்குநருமான எஸ்.எஸ்.குமரன் விக்னேஷ் சிவன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மேலும் படிக்க: Animal: ஹிட்லரின் சின்னத்தை பெருமையாக நெஞ்சில் குத்துவதா.. அனிமல் படத்தை வெளுத்த 'தளபதி 68' ஒளிப்பதிவாளர்!