அனிமல்


ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் (Animal) திரைப்படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வந்தபடி இருக்கின்றன. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் அனிமல். பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் அனில் கபூர், பாபி தியோல், பப்லு ப்ரித்விராஜ், த்ரிப்தி டிம்ரி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள்.



வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை எட்டியுள்ள அனிமல் திரைப்படம் விமர்சகர்களால் அடித்து துவைக்கப்படுகிறது. விமர்சகர்கள் மட்டுமில்லை நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரை இந்தப் படம் சீண்டி கடுமையாக விமர்சனங்களைப் பெற்று வருகிறது. முன்னதாக அனிமல் படத்தை கிரிக்கெட் வீரர் ஜெயதேவ் உனட்கட் திட்டி பதிவிட்டிருந்தது சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. என்னுடைய மூன்று மணி நேரம் வேஸ்ட் என்று அவர் தனது பதிவில் கூறியிருந்தார்.


தளபதி 68 ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி விமர்சனம்


இப்படியான நிலையில் ‘வெந்து தணிந்தது காடு’ மற்றும் தற்போது கேப்டன் மில்லர், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 ஆகிய படங்களின் ஒளிப்பாதிவாளர் சித்தார்த்தா நுனி அனிமல் படத்தை பார்த்து கொந்தளித்துள்ளார்.


தன்னுடைய சமூக வலைதளத்தில் அவர் குறிப்பிட்டிருப்பது "அனிமல் படத்தை நேற்று பார்த்தேன். இந்தப் படம் என்னை மிக மோசமாக சீண்டியிருக்கிறது. நாஜி அடையாளமான ஸ்வஸ்திகா குறியீட்டை பெருமையாக நெஞ்சில் குத்தியிருப்பது, ஆணாதிக்கத்தை நியாயப்படுத்தும் பொத்தாம்பொதுவான தர்க்கங்களை முன்வைப்பது, எந்தவித கட்டுப்பாடும் இல்லாத வன்முறை சித்தரிப்புகள், திருமணம் என்கிற பெயரில் பாலியல் வன்முறையைத் திணிப்பது, கணவன் காட்டுமிராண்டி போல் நடந்துகொள்ள ஊமையாக மனைவி இருப்பது என எல்லாம் சகிப்புத் தன்மைக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன.


எல்லாவற்றுக்கும் மேலாக படத்தின் கடைசி ஷாட் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் அவமதிக்கும் வகையில் இருக்கிறது. இந்த மாதிரியான ஒரு படம் இவ்வளவு பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெறுவது நம் நாடு எந்த மாதிரியான சமூக கட்டமைப்பிற்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. மேலும் ஏ சான்றிதல் வழங்கப்பட்ட இந்தப் படத்திற்கு குழந்தைகளை அனுமதித்திருக்கிறார்கள். இளைஞர்களை பாதுகாக்கும் சென்சார் வாரியத்தின் பொறுப்பு எங்கே போனது?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.