தமிழ் சினிமாவின் இளம் இயக்குநரான ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் இன்று நடைபெற்றது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேத்தியும், நடிகர் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யாவை இன்று கரம் பிடித்தார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற அவர்களின் திருமண விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை மனதார வாழ்த்தினர்.



காதலுக்கு பச்சைக்கொடி :


கடந்த 2009ம் ஆண்டு நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் பிரபுவின் சகோதரியின் மகன் குணாலுக்கும் திருமணம் நடைபெற்றது. சில காரணங்களால் அவர்களின் திருமண வாழ்க்கை விவகாரத்தில் முடிந்தது. அதற்கு பின்னர் தன்னுடைய பேக்கிங் தொழிலில் கவனம் செலுத்தி வந்த ஐஸ்வர்யாவுக்கும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. இரு வீட்டாரும் அவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க இன்று அவர்களின் திருமணம் நடைபெற்றது.



மார்க் ஆண்டனி மூலம் கம்பேக் :


'திரிஷா இல்லனா நயன்தாரா' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன் அதன் தொடர்ச்சியாக அன்பானவன் அடங்காதவன் அசரதவன், பஹீரா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம் மூலம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூல் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வெற்றியால் ஹிட் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். பல ஆண்டுகளாக நடிகர் விஷால் படங்கள் பெரிய அளவுக்கு வெற்றியை பெறாமல் இருந்த நிலையில் 'மார்க் ஆண்டனி' படம் மூலம் கம் பேக் கிடைத்துள்ளது.  அஜித்துடன் கூட்டணி :


நடிகர் அஜித்தின் AK 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நடிகர் அஜித், மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டு இருப்பதால் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணத்திற்கு அவர் வருவது சந்தேகமாகத்தான் உள்ளது.  


 



பிரபலங்கள் வாழ்த்து :


பிரபுவின் மகள் திருமண விழாவில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். 'மார்க் ஆண்டனி' படத்தின் ஹீரோ விஷால், நடிகர் துல்கர் சல்மான் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் பிரபல தொழிலதிபரும் 'தி லெஜெண்ட்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான லெஜெண்ட் சரவணனும் ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். திரை பிரபலங்கள் திருமண விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளன. நடிகரும் மணமகளின் அண்ணனுமான விக்ரம் பிரபு மிகவும் பரபரப்பாக தங்கை திருமண வேலைகளை செய்து வருகிறார்.