Pa Ranjith: ஏறி சோறு என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், ”எங்கோ இருக்கும் சிறு கூட்டத்தை எதிர்ப்பது பலசாலி” இல்லை என்று கூறியுள்ளார். 

 

புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பா.ரஞ்சித், ”பலமற்றவன், பலமற்றவன் என்று சொல்லி நம்மை பலமற்றவர்களாக வைத்திருக்கிறார்கள். மாரி செல்வராஜ் பாட்டில் படையிருந்தும் பயந்த சனம் என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால், நாம் பயந்தவர்களா என்று தெரியவில்லை. நாம் எதுக்காகவோ கட்டுப்பட்டு இருக்கிறோம். நாம் வன்முறை செய்பவர்கள் கிடையாது. நமது பண்பாடு வன்முறைக்கு எதிராக இருந்துள்ளது. நம்மை பயந்தவர்களாகவே அடையாளப்படுத்தி வைத்துள்ளனர். 

 

இதனால், முதலில் நான் என்னை தயார்ப்படுத்தி கொண்டேன். என்னை, எனது கலாச்சாரம், எனது பண்பாட்டை நான் தெரிந்துக் கொண்டேன். அவர்களை குற்றவாளிகள் என்றேன் நான். அதனால், பலர் என்னை நோக்கி வர தொடங்கினர். எனக்கு கிடைத்த தகவல்களை பிறருக்கு சொன்னதால், பலர் என்னிடம் வந்தனர். அவர்களுக்கும் இதே ஆசை இருந்துள்ளது. அதன் பலனாய் கலை இலக்கியம் சார்ந்து மிக முக்கியமான ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளோம். குறுகிய காலத்தில் ஓரளவுக்கு உயர்ந்துள்ளோம். 

 

அவன் நம்மை பார்த்து பயப்படுகிறான் என்றால் எதற்கு, பின்னாடி இருக்கற பசங்க பிடித்துக் கொள்வார்கள் என்ற அச்சம். சும்மா எங்கையோ இருக்கற சிறுக்கூட்டத்தை ஒடுக்குவதன் மூலம் நீங்கள் பலசாலி என்று நினைத்திட கூடாது. சரிசமமாக நின்று செய்வது தான் சண்டை. நாங்கள் கத்தியை வைத்து மாட்டுத்தோல் உரிப்போம். மனித தோலை உரிக்கமாட்டோம். எங்கள் கலை மூலம் பண்பாட்டை கூறுகிறோம். 

 

சிலர் நான் சாதி பார்ப்பதில்லை என்பார்கள். ஆனால், அவர்களின் ஊரில் சேரி என்ற ஒன்று தனியாக இருக்கிறதே ஏன் என்று கேட்கிறேன். ஆனால், அவர்கள் சாதி இல்லை என்று கூறி கொண்டு, என் எழுத்து, திரைப்படம் சாதியை பேசுவதாக கூறுகின்றனர். முதலில் அவர்களின் ஊரில் இருக்கும் சேரியை ஒன்றாக இணைத்துவிட்டு பேசட்டும். 

 

நீங்கள் சாதியை விரும்புகிறீர்கள், நான் சாதியை விரும்பவில்லை. அவ்வளவு தான் வித்யாசம். எனது மொழி, எனது உடல் எல்லாமே சாதியை சார்ந்துள்ளது. நாம் ஏன் விலக்கப்பட்டவர்களாக இருக்கிறோம், பொதுவில் ஏன் எனக்கு பங்கு இல்லை, என்னுடன் விளையாடி கொண்டிருந்த பசங்க வளர்ந்ததும் என்னிடம் பேசுவதில் வித்யாசம் ஏற்பட்டது குறித்து என்னிடம் நிறைய கேள்விகள் இருந்தது. இத்தனை கேள்விகளுக்கும் அம்பேத்கர் தான் முதல் விடையாக இருந்தார். 

 

பலரை சந்தித்து பேசினேன். கவிதை, புத்தகங்களை வாசித்தேன். அதனால், நான் யார் என்பதை தெரிந்து கொண்டேன். நான் அடையாள அரசியல் செய்கிறேன் என்கிறார். ஆமாம், உங்களை எதிர்க்கும் அடையாள அரசியலை தான் நான் செய்கிறேன்” என பேசியுள்ளார். மேலும், நீலம் என்பது ரஞ்சித் மட்டும் தான் என்று நினைக்க வேண்டாம். எல்லாம் சேர்ந்த குழு தான் நீலம் அமைப்பு என்றார்.