தருமபுரி ரயில் நிலையத்தை மேம்படுத்த ஒன்றிய அரசு அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் 15 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தருமபுரி மக்களவை உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
தருமபுரி ரயில் நிலையத்தில் கூடுதல் பயண சீட்டு வழங்குமிடம், ஓய்வறைகள், நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமாரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார், தருமபுரி ரயில் நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தருமபுரி ரயில் நிலையத்தில் 2004 ஆம் ஆண்டு நடைமேடை அமைக்கப்பட்டது. அதற்குப் பின்பு பெரிய அளவில் நடைமேடை மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது ஒன்றிய அரசு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூபாய் 15 கோடி தருமபுரி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளுக்கு ஒதுக்கி உள்ளது. மேலும் மக்களவை உறுப்பினர் என்ற முறையில் தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தியதன் அடிப்படையில் இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நலன் சார்ந்து நாம் முன்வைத்த அத்தனை கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்று கொண்டுள்ளது. இந்த நிலையில் தருமபுரி ரயில் நிலையத்தில் பயணிகள் நலன் கருதி பல்வேறு மேம்பாட்டு பணிகள் ரூ.15 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த பணிகளுக்கு அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தருமபுரி ரயில் நிலையத்திற்கு அருகில் 400 இருசக்கர வாகனங்கள் மற்றும் 50 கார்கள் நிறுத்தும் அளவிற்கு கான்கிரீட் தளத்துடன் கூடிய வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட உள்ளது. மேலும் உயர் வகுப்பு பயணிகளுக்கு காத்திருப்புக் கூடம், மகளிர் மற்றும் பொதுப் பயணிகள் காத்திருப்புக் கூடம் என மூன்று காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் ஒவ்வொரு நடைமேடையிலும் சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் இயந்திரம், நவீன கழிப்பிட வசதிகள், தானியங்கி நகரும் படிக்கட்டுகள், டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் உள்ளிட்ட வசதிகளும் இத்திட்டத்தின் கீழ் தருமபுரி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் காரணமாக தருமபுரி ரயில் நிலையம் புதுப் பொலிவு பெற்று பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும். அதேபோல் பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையான வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் பகுதியில், உயர்மட்ட பாலம் அமைப்பதற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது வந்தே பாரத் வருவதால் அதிக நேரம் ரயில்வே கேட் அடைக்கப்படுகின்ற சூழல் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக வேண்டிய நிலை இருப்பதால், அந்த இடத்தில் நீர்மட்டம் பாலம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் பாலம் அமைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.