இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள படம் கேம் சேஞ்சர். கியாரா அத்வானி , எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். தமன் இசையமைத்துள்ளார். சுமார் 450 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராம் சரனின் சித்தப்பா மற்றும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது நிகழ்வில் ஷங்கரின் படங்களை தான் பார்த்த அனுபவங்களை பவன் கல்யாண் பகிர்ந்துகொண்டார்.
பிளாக்கிட் டிக்கெட் எடுத்து படம் பார்த்தேன்
" நான் சென்னையில் இருந்தபோது நிறைய படங்கள் பார்த்ததில்லை. ஆனால் ஷங்கரின் ஜெண்டில் மேன் படத்தை பிளாக்கில் டிக்கெட் எடுத்து பார்த்திருக்கிறேன். நான் நடிகனாக வருவேன் என்று அப்போது நான் யோசித்து கூட பார்த்ததில்லை. காதலன் படத்தை சேர்ந்து பார்க்க யாரும் இல்லாததால் என் பாட்டியுடன் சேர்ந்து அந்த படத்தை பார்த்தேன். எல்லா தலைமுறையினரை சேர்ந்தவர்களையும் கவரும் விதமாக ஷங்கர் படம் எடுத்திருக்கிறார். அதில் ஒரு சமூக கருத்தும் இருந்து வருகிறது.
உலக அளவில் தெலுங்கு சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர்களில் அவரும் ஒருவர் . ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் டோலிவுட் சினிமாவை திரும்பி பார்க்க அவரது படங்களுக்கு பெரும் பங்கு இருக்கின்றன. ஷங்கர் தமிழில் இயக்கி தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட படங்கள் இங்கு இருக்கும் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன அவர் நேரடியாக தெலுங்கில் ஒரு படம் பண்ண வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசையாக இருந்தது. தற்போது கேம் சேஞ்சர் படத்தை தெலுங்கில் எடுத்திருப்பது மகிழ்ச்சி" என பவன் கல்யான் தெரிவித்தார்.