இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அங்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா எனப் பல நாடுகளிடமும் இலங்கை அரசு பெருந்தொகைகளைக் கடன் வாங்கியுள்ளது. அங்கு உணவு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் வேகமாக உயர்ந்து வருகிறது.
அத்துடன் கடந்த மார்ச் மாதத்தில் அங்கு பணவீக்கம் சுமார் 18.5% சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. அத்துடன் உணவு பொருட்களின் விலையும் 30.1% வரை அதிகரித்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்ஷே மற்றும் இலங்கை அரசை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இலங்கையின் நிலைகுறித்து மன வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார் நடிகை லாஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
அதில், ''மிக மோசமான போரை எதிர்கொண்ட இலங்கையர்களாகிய நாங்கள் எங்கள் குடும்பங்கள் உட்பட அனைத்தையும் இழந்தோம். சுனாமியை எதிர்கொண்டோம். 2019 இல் தேவாலயங்களில் குண்டுவெடிப்புகளை எதிர்கொண்டோம், நாங்கள் கோவிட் மற்றும் இப்போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறோம். இவை எங்களுடைய தவறு அல்ல, நாங்கள் இலங்கையர் என்பதால் எல்லாவற்றையும் எதிர்கொள்கிறோம். ஒவ்வொரு சூழ்நிலையிலும், இவை அனைத்தையும் கையாளும் அளவுக்கு நாங்கள் பலமாக இருந்தோம். இப்போது, இந்த பரிதாபமான சூழ்நிலையை சமாளிக்க ஒன்றாக இருப்போம், ஒருவருக்கொருவர் ஆதரவளிப்போம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா, அந்த சீசனில் அதிக கவனம் பெற்றார். கவினுடன் காதல், கண்டித்த தந்தை, சேரனின் பாசம் என நிகழச்சியை சுவாரஸ்யமாக்கியதில் லாஸ்லியாவுக்கு முக்கிய பங்குண்டு. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்து வெளியே வந்து வாய்ப்புகளை பெறும் வெகு சிலரில், லாஸ்லியாவும் ஒருவராகிவிட்டார்.
அவரது கையில் கணிசமான அளவு படங்கள் உள்ள கூகுள் குட்டப்பா திரைக்கு வர உள்ளது. ஜான்பால், ஷாம் சூர்யா இணைந்து இயக்கம் பிரண்ட்ஷிப் படத்தில் படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார் லாஸ்லியா.