கன்னடத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட சீரியல்களிலும், பல திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் ஸ்ரீதர். கடந்த 1 வருடமாகவே இவருக்கு உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்சனைகளை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மே 26 -ஆம் தேதி, அதாவது நேற்று இரவு 10 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

ஸ்ரீதர் நாயக் உடல் நிலை குறித்து, கடந்த மாதம் தான் சில தகவல்கள் கசிய துவங்கியது. வைட்டமின் குறைபாடு தான் இவருடைய உடல்நல பிரச்சனைக்கு காரணம் என கூறப்பட்டது. மேலும் இவருடைய புகைப்படங்கள் வெளியான நிலையில், முற்றிலும் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருந்தார். இவரது முகம் சுருங்கி, உடல் இளைத்து காணப்பட்டார். இவரது தோற்றமே அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஸ்ரீதர் மட்டுமே இவருடைய குடும்பத்தில் நடிப்பின் மூலம் சம்பாதித்து வந்த நிலையில்...  இவருக்கு உடல் நலம் குன்றியதால் பொருளாதார ரீதியில் இவரின் குடும்பம் கஷ்டத்தை சந்திக்க துவங்கினர். மேலும் இவரது சிகிச்சைக்கு மட்டுமே நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 ஆயிரம் தேவை பட்டதாக கூறப்பட்டது. எனவே இவருடைய சிகிச்சைக்காக இவரது நண்பர்கள் மற்றும் சக நடிகர்கள் சிலர், சமூக வலைத்தளம் மூலம் நிதி உதவி கேட்டு கோரிக்கை வைத்தனர். ஒரு சில சீரியல் பிரபலங்கள் நேரில் சென்று இவரின் சிகிச்சைக்கு உதவியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், ஸ்ரீதர் நாயக் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் உயிரிழந்துள்ளார். கடைசியாக இவர் கிச்சா சுதீப் நடிப்பில் வெளியான மேக்ஸ் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் என்பதை தாண்டி டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும், தொகுப்பாளராகவும் பிரபலமானவர் ஸ்ரீதர் என்பது குறிப்பிடத்தக்கது.