தெலுங்கானாவில் துணிக்கடை திறப்புவிழாவிற்காக வந்த நடிகை கீர்த்தி சுரஷை பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். இதனால், அந்தப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதேபோல், தெலுங்கில் பவன் கல்யான், மகேஷ் பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், ‘அண்ணாத்த’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்துள்ளார். தெலுங்கு வேதாளம் ரீமேக்கில் சீரஞ்சிவியின் தங்கையாகவும் நடிக்கிறார். சமீபத்தில், செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள சாணி காகிதம் படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி, பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது விளம்பர படங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார். அத்துடன் நகைக் கடை, துணிக் கடை திறப்பு விழாவிலும் பங்கேற்கிறார்.
இந்த நிலையில், தெலுங்கானாவில் துணிக்கடை திறப்புவிழாவிற்காக வந்த நடிகை கீர்த்தி சுரஷை பார்க்க ரசிகர்கள் குவிந்ததால் அந்தப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. தெலுங்கானா மாநிலத்தின் மஞ்சிரியாளா மாவட்டத்தில் புதிய துணிக்கடையை கீர்த்தி சுரேஷ் இன்று திறந்து வைத்தார். இதற்காக வந்த அவரை காண ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். அவருக்கு மேளதாளங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால், அந்தப் பகுதியே திருவிழா போல் காட்சியளித்தது. அவர் வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சிவப்பு நிற புடவையில் அழகாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்களை ரசிகர்கள் தங்களின் ஸ்டேடஸ் ஆகவும், டிபியாகவும் வைத்துள்ளனர். இதனிடையே, கொரோனாவின் தாக்கம் முழுமையாக குறையாத நிலையில், கீர்த்தி சுரேஷை காண வந்த ரசிகர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிகளவில் கூடியதாக சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.