தெலுங்கு திரை உலகைச் சேர்ந்த பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர், அண்மையில் லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்ஸ்யூல் எடிஷன் சொகுசு காரை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனால், தெலுங்கு திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் பார்வையும் ஜூனியர் என்டிஆரின் பக்கம் திரும்பியது. அவ்வளவு அதிக விலைக் கொண்ட மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் திறன் கொண்ட சொகுசு கார் இதுவரை யாரும் இந்தியாவில் வாங்கவில்லை. இத்தகைய காரை வாங்கியதன் காரணத்தினால் இந்திய வாகனங்களின் உலக தலையங்கத்திலும் அவர் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் மற்றுமொரு ஆச்சரியமளிக்கும் தகவல் ஜூனியர் என்டிஆர் குறித்து தற்போது வெளிவந்திருக்கின்றன. நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது புதிய காருக்கான பதிவெண்ணிற்காக பல லட்சங்களை வாரி இறைத்திருப்பதாக கூறப்படுகிறது. 



அண்மையில் ஹைதராபாத் ஆர்டிஓ அதிகாரிகள் TS 09 FS 9999 எனும் எண்ணை ஏலம் விட்டிருக்கின்றனர். கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற இந்த ஏலத்தில் பலர் பங்கு பெற்றிருக்கின்றனர். அதில் ஒருவராக ஜூனியர் என்டிஆரும் பங்கு பெற்றிருக்கின்றார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற ஏலத்தில் பலர் இந்த பேன்சி பதிவெண்ணை வாங்க லட்சக் கணக்கில் ஏலம் கேட்டனர். அனைவரையும் மிஞ்சும் வகையில் ஜூனியர் என்டிஆர் அந்த பதிவெண்ணை ரூ. 17 லட்சத்திற்கு ஏலம் கேட்டிருக்கின்றார். இதைத் தொடர்ந்து ஆர்டிஓ அதிகாரிகள் ஜூனியர் என்டிஆருக்கே அந்த பதிவெண்ணை வழங்குவதாக அறிவித்தனர். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த டோலிவுட் திரையுலகையுமே மிரள வைக்கும் வகையில் அமைந்துள்ளது.


ஜூனியர் என்டிஆரிடம் இருக்கும் பல்வேறு கார்கள் 9999 எனும் பதிவெண்ணைக் கொண்டதாகக் இருக்கின்றன. இவரின் தாத்தா நந்தமுரி தரகா ராம ராவ், தாத்தாவின் அப்பா தொடங்கி பலர் 9999 என்ற பதிவெண் கொண்ட கார்களை பயன்படுத்தி இருக்கின்றனர். ஆகையால், தனக்கும் இந்த பதிவெண் மிகவும் பிடித்த ஒன்றாக மாறிவிட்டதாக முன்னதாக ஒரு நேர்காணல் நிகழ்வு ஒன்றில் ஜூனியர் என்டிஆர் கூறியிருந்தார். இதன் அடிப்படையிலேயே தற்போது ரூ. 17 லட்சம் செலவில் பேன்சி பதிவெண்ணை அவர் வாங்கியிருக்கிறார்.



இந்த பதிவெண் அண்மையில் வாங்கப்பட்ட லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்ஸ்யூல் பதிப்பு காருக்காக வாங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்தியாவிலேயே லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்ஸ்யூல் பதிப்பு காரை வாங்கிய முதல் நபர் ஜுனியர் என்.டி.ஆர் தான். ஆகையால், இக்காருக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக இப்பதிவெண் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்த கார் வழக்கமான உருஸ் எஸ்யூவியைக் காட்டிலும் 20 சதவீதம் அதிக விலையில்தான்  விற்பனைக்கு வந்துள்ளது. வழக்கமான லம்போர்கினி உருஸ் எஸ்யூவி இந்தியாவில் ரூ. 3 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. லம்போர்கினி உருஸ் எஸ்யூவி கிராஃபைட் கேப்ஸ்யூல் எடிஷனில் மட்டுமின்றி பேர்ல் கேப்ஸ்யூல் எனும் எடிஷனாகவும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த எடிஷனை அண்மையில் நடிகர் ரன்வீர் சிங் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த கார் அதிகபட்சமாக 641 பிஎச்பியையும், 850 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் உச்சபட்சமாக மணிக்கு 305 கிமீ எனும் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. மேலும், வெறும் 3.6 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும் என்பது உருஸ் எஸ்யூவியின் கூடுதல் சிறப்பு. இதேபோல், 12.8 செகண்டுகளுக்கு உள்ளாக பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 200கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். இப்படிப்பட்ட காரை வாங்கிய ஜுனியர் என்.டி.ஆரை திரையுலகம் வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது.