பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயக்குமாரி உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஜெயகுமாரி. நூற்றுக்கு நூறு, எங்கிருந்தோ வந்தாள், வைரம், ரிக்ஷாக்காரன், தேடி வந்த லட்சுமி, சிஐடி சங்கர், தபால்காரன் தங்கை, அருணோதயம், காசேதான் கடவுளடா, முள்ளும் மலரும், திருமகள் , பதிலுக்கு பதில், வைரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர், வில்லி மற்றும் கவர்ச்சி வேடங்களில்தான் அதிகமாக நடித்திருந்தார். 14 வயதில் எம்.ஜி.ஆர். நடித்த நாடோடி தான் இவரது முதல் தமிழ் படம் ஆகும் .1968 ஆம் ஆண்டு மலையாளத்தில் கலெக்டர் மாலதி மூலம் அறிமுகமானார் .
இதையும் படிங்க: Cool Suresh: ‛விடுமுறை கேட்பீயா...’ கூல் சுரேஷை தேடி வந்த ஜி.ஜி.சிவா!
70 வயதான ஜெயகுமாரி தற்போது வேளச்சேரியில் தனது மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில் அவரது கணவர் இறந்து விட்டார். சில ஆண்டுகளுக்கு முன் பேட்டி ஒன்றில், நடிப்பதை விட கவர்ச்சி நடனத்துக்கு அதிகமாக சம்பளம் கொடுத்தார்கள். அதனால் டான்ஸ் ஆடுவதில் அதிக ஆர்வம் காட்டினேன். மேலும் சம்பாதித்த பணத்தில் இரண்டு தங்கைகளுக்கும் திருமணம் செய்து வைத்தேன். நாகப்பட்டினத்தை சேர்ந்த அப்துல்லாவை 25 வயதில் காதல் திருமணம் செய்துக் கொண்ட எங்களுக்கு சாஜிதா, பானு என்ற 2 மகள்களும், ரோஷன் என்ற ஒரு மகனும் பிறந்தனர்.
முன்னொரு காலத்திலே என்னும் படத்தை கணவர் சொந்தமாக தயாரிக்க, பைனான்சியருடன் ஏற்பட்ட சண்டையில் படம் வெளியாகவில்லை. அந்த கவலையில் என் கணவர் இறந்துவிட்டார். வாங்கிய கடனுக்காக கணவருக்கு சொந்தமான பெரிய வீட்டை வாங்கிக் கொண்டார்கள். அதேசமயம் நான் மூன்று கார்கள் வைத்திருந்த நிலையில், அனைத்தையும் விற்று தான்வாடகை வீட்டிற்கு குடியேறினேன். அதேசமயம் மூத்த மகளை தவிர மற்ற இருவரையும் என்னால் படிக்க வைக்க முடியவில்லை. என் தங்கைகளும்,2 மகள்களும் எனக்கு உதவவில்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் அரசு மருத்துவமனையில் ஜெயக்குமாரி உயிருக்கு போராடி வருகிறார். அவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை என்ற தகவல் அறிந்த இணையவாசிகள் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மேலும் பழம்பெரும் நடிகையான ஜெயகுமாரிக்கு நடிகர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் தாமாக முன்வந்து உதவ வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மேலும் படிக்க: Sivakarthikeyan: சர்ச்சையில் சிக்கிய சிவகார்த்திகேயன்... ட்விட்டரில் வைரலாகும் வீடியோ