பிரதமர் மோடி நேற்று ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டத்திற்காக உஸ்பெகிஸ்தான் சென்று இருந்தார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன்பின்னர் அவர் உலக நாடுகளின் தலைவர்கள் சிலரை சந்தித்து பேசினார். அதன்படி ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடி புதின் இடம் இது போருக்கான நேரமில்லை என்று கூறியதாக தெரிகிறது. 


இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “ரஷ்ய அதிபர் புதின் இடம் இது போருக்கான சூழல் இல்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஏனென்றால், உலகம் தற்போது உணவு பாதுகாப்பு, எரிப்பொருள், உரங்கள் தொடர்பான பிரச்சினைகளை சந்தித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதை அப்படியே இந்தியாவிற்கு பொருத்தி பார்த்தால், பிரதமர் மோடியிடம் இது பிரிப்பதற்கும் மக்களை துருவங்களாக பிரிப்பிதற்கும் ஏற்ற நேரம் இதுவில்லை என்று யார் கூறுவார்கள்?


 






ஏனென்றால் இந்திய மக்கள் பணவீக்கம், வேலையிண்மை மற்றும் மதம் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை அவருக்கு யார் தெரிவிப்பார்கள்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 


முன்னதாக உக்ரைன் போர் ஒன்பதாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்ச மாநாட்டுக்காக சமர்கண்டுக்கு சென்ற பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதினுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பேசிய மோடி, போரை நடத்துவதற்கான நேரம் இதுவல்ல என புதினுடன் கூறினார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததிலிருந்து முதல்முறையாக இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்து கொண்டுள்ளனர். உக்ரைனில் நடந்து வரும் போர் தொடர்பாக ரஷியாவின் முக்கிய கூட்டு நாடான சீனா கவலை தெரிவித்ததை புதின் ஒப்பு கொண்டதையடுத்து, பிரதமர் மோடியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. 


 






உக்ரைனில் பிப்ரவரியில் தொடங்கிய போர் விரைவில் முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாகவும், இந்தியாவுக்கு போர் குறித்து கவலைகள் இருப்பதை புரிந்து கொண்டதாகவும் புதின் இந்திய பிரதமரிடம் கூறினார். மேலும் பேசிய அவர், "துரதிர்ஷ்டவசமாக, எதிர்தரப்பான உக்ரைன் பேச்சுவார்த்தையை நிராகரித்துள்ளது. மேலும் போர்க்களத்தில் இராணுவ வழிமுறைகளின் மூலம் தனது இலக்குகளை அடைய அந்நாடு விரும்புகிறது" என்றார்.


உக்ரைனில் ரஷியப் படைகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டுக்கு மத்தியில், இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்படுகிறது.


உக்ரைன் மீது படையெடுத்ததற்கு இந்தியா இதுவரை ரஷியாவை விமர்சிக்கவில்லை. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்தியாவும் ரஷியாவும் பனிப்போர் காலத்திலிருந்தே நீண்டகால நட்புறவை கொண்டுள்ளன. மேலும், ரஷியா இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத சப்ளையராக உள்ளது.இரு நாடுகளின் முக்கிய நலன்களுக்காக ரஷியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருப்பதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.