நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் கொரிய நடிகர்கள் குறித்து பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. 


விஜய் தொலைக்காட்சியின் "கலக்க போவது யாரு" நகைச்சுவை ரியாலிட்டி ஷோவில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது வாழ்க்கையை தொடங்கிய சிவகார்த்திகேயன் 2007 ஆம் அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார். அவரது நகைச்சுவை திறன் தொடந்து அந்த தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பணியை வழங்கியது. முன்னணி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தனுஷ் நடித்த 3 படத்தில் சிறிய வேடத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். 



தொடர்ந்து மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர், மனம் கொத்தி பறவை, எதிர் நீச்சல், மான் கராத்தே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, டாக்டர், டான் என பேமிலி ஆடியன்ஸை கவர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார். அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான்,பிரின்ஸ், மாவீரன் உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளது. மேலும் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடகர்,  பாடலாசிரியர் என பல பரிணாமங்களையும் அவர் அடைந்துள்ளார். 






இந்நிலையில் ட்விட்டரில் சிவகார்த்திகேன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில் டான் படத்தில் சூரியும்,சிவகார்த்திகேயன் கல்லூரியில் வார்த்தைகள் குழற்றி பேசும் வசனத்தைப் பேசிக் காட்டுகிறார். தனக்கு தெரிந்த ஒரே கொரிய மொழி இதுதான் என அதனை சொல்கிறார். மேலும் நான் எப்போது கொரியன் படம் பார்த்தாலும் அதில் நடிக்கும் நடிகர்கள் எல்லாம் ஒரே ஆர்டிஸ்ட் தான் என தோன்றும். சில நேரத்தில் எது ஹீரோ, ஹீரோயின் என கூட தெரியாது. இதனை கொரியா மக்கள் பார்த்தா டென்ஷன் ஆகிருவாங்க என சொல்கிறார்.  இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த சிலர், சிவகார்த்திகேயன் கொரிய மொழியை கேலி செய்கிறார். இவை அனைத்தும் ஒரு பள்ளியில் குழந்தைகள் முன்னிலையில் நடந்த நிகழ்வில்! நமது பிரபலங்கள் சிறப்பு உணர்திறன் பட்டறைகளில் கலந்து கொள்ள வேண்டும்! என தெரிவித்துள்ளனர். 






இதனைக் கண்ட ரசிகர்கள், காமெடியை காமெடியாக மட்டுமே பாருங்கள். கண்டிப்பாக அப்படி எல்லாம் கேலி செய்யும் எண்ணம் யாருக்கும் இருக்காது என சிவாவுக்கு சப்போர்ட்டாக பேசியுள்ளனர்.