வெந்து தணிந்தது காடு படத்துக்கு அரசு விடுமுறை கேட்ட நடிகர் கூல் சுரேஷிடம் தேசிய முன்னேற்ற கழகம் தலைவர் சிவா சரமாரியாக கேள்வியெழுப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார். இந்த படம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. முன்னதாக வெந்து தணிந்தது காடு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கு ஏற்றாற்போல் படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 






முன்னதாக இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 2 ஆம் தேதி பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் சிம்புவின் ரசிகரும், நடிகருமான கூல் சுரேஷ், படம் ரிலீசாகும் செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என பேசியிருந்தார். இதன் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் தேசிய முன்னேற்ற கழகம் தலைவர் ஜி.ஜி.சிவா என்பவர் கூல் சுரேஷூக்கு போன் செய்து  சரமாரியாக கேள்வி எழுப்பினார். 


தமிழக அரசு என்ன தனியார் கம்பெனியா, உங்கள் சுயநலத்துக்கு அரசு விடுமுறை விட சொல்வீங்களா..என கேட்க, இதற்கு பதிலளித்த கூல் சுரேஷ், ஒரு கட்டத்தில் பைத்தியம் மாதிரி பேசாதீர்கள் என கூறியிருந்தார். இந்த ஆடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இணைய ஊடகம் நேர்காணலில் கூல் சுரேஷ் கலந்து கொண்டிருந்த போது, திடீரென அங்கு தேசிய முன்னேற்ற கழகம் தலைவர் ஜி.ஜி.சிவா அங்கு வந்தார். 


அப்போது நான் கேள்வி கேட்டதற்கு என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என சொன்னீர்களே..இது என்ன நியாயம்  என சிவா கேட்க, ஒரு கட்டத்தில் கூல் சுரேஷ் மிரண்டு போனார். இவர் அரசு விடுமுறை கேட்டால் நடிகர் சிம்பு அதனை ஆதரித்து ஏற்றுக் கொள்வாரா, உங்களுடைய சகோதரர் டி ராஜேந்தர் அதனை ரசிப்பாரா? என கேள்விகளை அடுக்கினார் சிவா. உடனே நான் ஒரு ரசிகனாக தான் கேட்டேன் என கூல் சுரேஷ் சொல்ல, இதை அன்னிக்கு போனில் கேட்டபோது அன்பின் மிகுதியால் சொன்னதாக சொல்லாமல் மனநலம் பாதிக்கப்பட்டதாக சொன்னது என்ன நியாயம் என சிவா கேட்கிறார். 


ஆனால் முன்னாடியே நான் இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்டதாகவும், இப்போதும் கூட கேட்கிறேன். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறேன். எனக்கும் சமூகத்தின் மீது அக்கறை இருக்கத்தான் செய்கிறது என கூல் சுரேஷ் தெரிவிக்கிறார்.