Vijayakanth - Sendrayan : சினிமா வாய்ப்பு தேடி அலைந்து கஷ்டத்தில் இருந்தபோது விஜயகாந்த் அலுவலகத்தில் போடும் சாப்பாட்டை சாப்பிட்டு வாழ்ந்ததாக நடிகர் சென்ட்ராயன் உருக்கமாக தெரிவித்துள்ளார். 

 

கடந்த டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் மறைந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் உடல் அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேட்டியில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று திரை பிரபலங்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

 

அந்த வகையில் இன்று நடிகர்கள் சூர்யா, சென்றாயன், குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் நேரில் சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சென்ராயன், விஜயகாந்த் பற்றி உருக்கமாக பேசியுள்ளார். அதில், ”நான் நடிக்க வேண்டும் என்று முயற்சித்தபோது கஷ்டப்பட்டு இருக்கேன். என் குடும்பம் ரொம்ப கஷ்டப்படுற பின்னணி கொண்டவங்கதான். வீட்ல இருந்து காசு வராது. அப்போது ஒவ்வொரு கல்யாண மண்டபங்களில் திருமணத்திற்கு போடும் சாப்பாட்டை சாப்பிட்டு நடிக்க போகவேண்டுமென முயற்சித்தோம். சில சமயம் திருமணங்களே நடக்காது.

 

அந்த காலத்தில் சாப்பாட்டுக்கு என்ன பண்றதுன்னு தெரியாது. அப்போ பாண்டி பஜாரில் இருக்கும் விஜயகாந்த் ஆபிசில் சாப்பாடு போடுவாங்க. நாங்க எல்லாரும் போயிட்டு சாப்பிடுவோம். அங்க சாப்பாடு நல்லா ருசியாக இருக்கும். லெமன் சாதம், தக்காளி சாதம், சாம்பார் சாதம், பிரியாணி எல்லாம் போடுவாங்க. பல நாட்கள் அந்த சாப்பாட்டை சாப்பிட்டு இருக்கேன். தி.நகர் பக்கம் சென்றால் கண்டிப்பாக விஜயகாந்த் சாரோடு, அலுவலகத்துக்கு சென்று அங்கு போடும் சாப்பாட்டை சாப்பிட்டுள்ளேன். 

 

பணக்காரன், ஏழை, சாதி, மதம் என்று எதையும் பார்க்காதவர் விஜயகாந்த் சார். யார் வந்தாலும் முதலில் அவர் கேட்பது சாப்பிட்டீர்களா? என்றுதான். கஜேந்திரா படத்திற்காக நாங்கள் 20 பேர் சென்றோம். அப்போது எங்களை பார்த்த முதலில் அவர் கேட்டது சாப்பிட்டீர்களா? என்றார். நாங்கள் சாப்பிடவில்லை என்று சொன்னதும், மேஜேனரை அழைத்து எங்களுக்கு சாப்பாடு போட வைத்தார். 

 

விஜயகாந்த் சார் சிங்கம் போல் கம்பீரமாக இருந்தாரு. போன மாதம் வரை மனிதனாக இருந்தாரு. தற்போது சாமியாக மாறியுள்ளார். விஜயகாந்த் சாரை போல் பலர் அன்னதானம் செய்து வருகின்றனர். அதில் நானும் என்னால் முடிந்த உதவியை செய்வேன்” என்று கூறியுள்ளார்.