சென்னையில்  நேற்று பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "கடந்த 2014-23 மார்ச் வரை ரூ.6.23 லட்சம் கோடி வரிப்பணத்தை  தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசு பெற்றுள்ளது. பெற்றதைவிட அதிகமாகவே  ரூ.6.96 லட்சம் கோடியை தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொடுத்திருக்கிறது.


மத்திய அரசு செஸ் வரி வசூலிப்பதில் 2014 முதல் 57,557 கோடி வந்திருக்கிறது. இதில் NHAI சாலைகள் போடுவதற்கு ரூ.37,965 கோடியை தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது" என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. இவரின் பேட்டியை குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் சில கருத்துகளை பதிவிட்டிருக்கிறார். 


தமிழ்நாட்டு மக்கள் மத்திய அரசு என்ன செய்தது?


அதன்படி, ”பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது திராவிட மாடல் அரசு.


ஆட்சி அமைந்தது முதல், மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் அளவுக்கு செலவில் மிச்சம்,
காலை உணவுத் திட்டம் மூலம் பணிச்சுமைக் குறைப்பு, புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாதம் 1000 ரூபாய், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் எனப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசின் நிதியினைக் கொண்டு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது திராவிடமாடல் அரசு.






இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காகச் செய்தது என்ன ஒன்றிய நிதியமைச்சரின் பேச்சுக்கு விரிவான பதில் தந்திருக்கிறார் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 


தங்கம் தென்னரசு சொன்னது என்ன?


”சமீபத்தில் தமிழகத்தை பாதித்த இரண்டு பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கிப்பட்டது.  கடுமையான நிதி நெருக்கடி சுமைகளின் போதும் தற்போது பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 


ஆனால், மத்திய அரசு இந்த சுமைகளில் இருந்து மாநில அரசை மீட்க  எந்த உதவியும்  செய்யவில்லை.   நம்மிடத்தில் இருந்து மத்திய அரசுக்கு செல்லும்  ஒவ்வொரு ரூபாயிற்கும் மீண்டும் நாம் திரும்ப பெறுவது 29 பைசா தான்.பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இந்த விகிதாச்சாரம் மாறுபட்டுள்ளது.


உதாரணமாக உத்தரபிரதேசத்தில் இருந்து 2.23 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு பெறும் நிலையில், அவர்களுக்கு  திரும்ப கிடைக்கும் நிதி 15.35 லட்சம் கோடியாக உள்ளது.


சென்னை மெட்ரோ 2 வது கட்ட திட்டம் 63 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இன்று வரை சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை" என்று கூறினார் அமைச்சர் தங்கம் தென்னரசு.