டிக்கிலோனா" திரைப்படத்தில் மாற்றுத்திறனாளிகளை உருவக் கேலி செய்யும் விதமாக அமைந்த காட்சி பார்வையாளர்களை முகம்சுளிக்க வைத்துள்ளது. மேலும், பல்வேறு சமூகநல  ஆர்வலர்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசரியர் தீபக் வெளியிட்ட கண்டனக் குறிப்பில், ”நடிகர் சந்தானம் அவர்களுக்கு ஓரு வார்த்தைங்க!! நகைச்சுவை என்பது மன இறுக்கத்தை விலக்கி, மனதை இலகுவாக்கும் தன்மையை கொண்டதாக இருக்க வேண்டும் ஒரு குழந்தையின் சிரிப்பைப்போல, தாயின் மடியைப்போல, அன்புக் காதலியின் பொன் முகத்தைப்போல!!


அப்படி இல்லாமல் மனதை நோகடிக்கும் விஷயமாக இருக்க கூடாது. ஏதோ இயற்கையின் வினையால் ஏற்பட்ட உடல் பாதிப்பை, நகைச்சுவைப் பொருளாக்கி காட்சிப்படுத்துவது நல்ல ஒரு சமூகத்தின் பண்பு இல்லை. 3200 ஆண்டுகளாக இந்த மண்ணில் நாகரீகமாக வாழும் தமிழ்ச்சமூகம், உடல் குறைபாட்டை "கிண்டலடிக்கிறது " என்பது நம்மை நமது வருங்கால சந்ததிகள் பிற்போக்காளர்கள் என்றல்லவா அழைக்க வகை செய்யும். பகுத்தறிவு வேண்டும் என்று உலகுக்கே எடுத்துச்சொல்லும் நாம், இப்படியா இயற்கை அன்னையின் சரிசமமான பிள்ளைகளான மாற்றுத்திறனாளிகளை கிண்டலடிப்பது?


மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு! என்று சொன்ன அறிவுத்தந்தை பெரியார் வழியாக கேட்கிறேன் எங்களுக்கு "மானமும் அறிவும் கிடையாதா? நடிகர் சந்தானம் அவர்களே!!! தற்போது வெளிவந்துள்ள "டிக்கிலோனா" என்ற திரைப்படத்தில் கம்பூன்றி நடக்கும் எங்களை " சைடு ஸ்டாண்டு " போட்டு நடக்கிறோம் என்று உருவக்கேலி செய்துள்ளீர்கள்.


ஒன்று தெரியுமா சந்தானம் அவர்களே!! தமிழ் வளர்த்த மூதாதைகள் பலர் கம்பூன்றி வளர்த்தவர்கள்தான்!! கம்பூன்றி நடக்கும் பல மாற்றுத்திறனாளிகள் நம் நாட்டின் பெருமையை உலக நாடுகள் மத்தியில் சிறப்பாக கொண்டு சென்று மெடல் பல பெற்றுவந்துள்ளனார் அதிலும் பாருங்க ஊனம் இல்லாதவர்களைவிட எங்கள் மக்கள் அதிகமாக வெற்றி பெற்று வந்துள்ளனார்.


ஐயா!! சின்னதாக காலில் அடிபட்டாலோ அல்லது காலணி கிழிந்தாலே நடக்க சரமப்படும் மக்களின் நடுவில், ஒரு கால் பாதிக்கப்பட்டவர்கள் தத்தி தத்தி நடக்கும்போது ஒவ்வொரு அடி எடுத்துவைக்கும் போது தரையை நோக்கி உடலை முன்னோக்கி செலுத்தி, அடுத்த அடி எடுத்து வைக்க, உடலை திரும்ப மேல் நோக்கி தூக்கினாலதான் அவரை அவரே நகர்த்த முடியும். இத்தனை நடக்க வேண்டுமானால் உடலின் தசை நார்கள் எவ்வளவு வேலை பார்க்க வேண்டும் சிந்தித்து பாருங்கள்! ஒரு அடி எடுத்து வைக்கவே இத்தனை சிரமப்படும் தோழர்கள், இத்தனையையும் ஏற்றுக்கொண்டு வாழ்வில் எதிர்நீச்சல் போடுபவர்கள் உண்மையில் "போராளிகள்". அவர்களை இப்படி இழிவாக நகைச்சுவைக்கு உட்படுத்துவது ஏற்புடையதல்ல.


இதைப்பற்றி நாங்கள் சொல்வதை சொல்லிவிட்டோம் அதேநேரம் எங்கள் கண்டனத்தையும் இந்த வேளையில் கனத்த இதயத்துடன் பதிவு செய்கிறோம்.பேசவேண்டிய ஊடகங்கள் எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து பேச வேண்டும் என்பதையும் கோரிக்கையாக முன்வைக்கிறோம்" என்று தனது கண்டத்தை பதிவு செய்துள்ளார். 


மேலும், வாசிக்க: 


’சபாபதி’, ‘டிக்கிலோனா’, ஏஜெண்ட் ஆத்ரேயா ரீமேக்.. பீஸ்ட் மோடில் சந்தானம்!


`டிக்கிலோனா’ - டைம் ட்ராவல்.. காமெடி.. கலாச்சார வகுப்பு.. சந்தானம் எடுக்கும் ஆன்லைன் க்ளாஸ்