‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது புதிய படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் நடிகர் சந்தானம். அவர் ஹீரோவாகவும், அவருடன் அனைகா சோதி, மொட்டை ராஜேந்திரன், ப்ருத்வி ராஜ் முதலானோர் நடித்திருந்தனர். இயக்குநர் ஜான்சன் இயக்கிய இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.
அதே வேளையில், நடிகர் சந்தானம் தன் கைவசம் பல்வேறு வித்தியாசமான கதைகளை வைத்து, அவற்றில் நடித்து வருகிறார். சபாபதி, கொரோனா குமார் முதலான படங்களுடன், அவர் நடித்த சர்வர் சுந்தரம், டிக்கிலோனா ஆகிய திரைப்படங்களும் ரிலீஸுக்குத் தயாராக காத்துக் கொண்டிருக்கின்றன.
சந்தானம் நடித்திருக்கும் ‘டிக்கிலோனா’ திரைப்படம், ஒடிடி தளமான Zee 5 தளத்தில் வெளியாவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்தப் படம், வரும் செப்டம்பர் 10 அன்று, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’நட்பே துணை’ படத்தில் நடித்த அனைகா இதில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். கிரிக்கெட் வீரர் ஜர்பஜன் சிங்கும் இந்தப் படத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது.
முதல் முறையாக மூன்று வேடங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளார் சந்தானம். இந்தத் திரைப்படம் டைம் ட்ராவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு கால கட்டங்களைச் சேர்ந்த தன்னையே சந்தானம் சந்தித்துக் கொள்வதாக இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது. இளையராஜாவின் ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடலை அவரது மகனும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா, ‘டிக்கிலோனா’ படத்திற்காக ரீமிக்ஸ் செய்திருப்பது, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த வேளையில், சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தெலுங்கு மொழியில் காமெடி த்ரில்லராக வெளிவந்த ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா’ திரைப்படத்தின் ரீமேக் இது. ’வஞ்சகர் உலகம்’ படத்தை இயக்கிய மனோஜ் பீதா இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார். இதில் சந்தானத்துடன் ஜோடி சேர்கிறார் ரியா சுமன். இவர் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக ‘சீறு’ படத்தில் நடித்தவர்.
தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி ஹீரோவாக நடித்த ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா’ திரைப்படம் பார்வையாளர்களிடையே பரவலாகப் பேசப்பட்டது. சிறிய அளவிலான ப்ரைவேட் டிடெக்டிவ் ஒருவனால் பெரிய கேஸ் ஒன்று தீர்க்கப்படுவதன் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத பிணங்களின் பின்னணியில் நிகழும் பெரிய வியாபாரத்தையும் இந்தப் படம் பேசியிருந்தது. புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரமான ஷெர்லாக் ஹோம்ஸின் அடிப்படையில், நெல்லூர் நகரத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், தமிழில் சிறு சில மாற்றங்களுடன் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.