வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம் ஒன்றை மாற்றி செய்திருந்தால், வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. கடந்த காலத்திற்குப் பயணம் செய்யும் வாய்ப்பு யாருக்கும் கிடைப்பதில்லை. தன் வாழ்க்கையில் சோர்வின் உச்சத்தில் இருக்கும் ஒருவனுக்கு அதிர்ஷ்டவசமாக அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் என்ன நடக்கும் என்று காமெடியையும், டைம் ட்ராவலையும் இணைத்து வெளிவந்திருக்கிறது ‘டிக்கிலோனா’.
2027ஆம் ஆண்டு மின்சார வாரியத்தில் வேலை செய்யும் முன்னாள் ஹாக்கி வீரர் மணி (சந்தானம்) எதிர்பாராத விதமாக பழைய கார் ஒன்றின் டிக்கியினுள் கடந்த காலத்திற்குப் பயணம் செய்யும் இயந்திரம் இருக்கும் ஆய்வுக்கூடம் ஒன்றைச் சென்றடைகிறார். அங்கு தனது பள்ளிக்கால நண்பன் ஆல்பர்ட் (யோகி பாபு) உதவியுடன் 2020ஆம் ஆண்டுக்குப் பயணித்து, தனது திருமணத்தை நிறுத்த முயல்கிறார். 2020ஆம் ஆண்டில் இருக்கு மணி எதிர்காலத்தில் தனது நிலைமை குறித்து தெரியாமல், திருமணத்திற்காக மகிழ்வுடன் தயாராகிக் கொண்டிருக்கிறார். 2020ஆம் ஆண்டில் வாழும் மணி, 2027க்குச் சென்று தனது வாழ்க்கையை வாழ்ந்து, மீண்டும் கடந்த காலத்திற்கே திரும்பி வந்து திருமணத்தை நிறுத்துகிறார். காலத்தில் பயணித்து மிகப்பெரிய மாற்றம் ஒன்றைச் செய்த பிறகு, மணியின் வாழ்க்கை தான் நினைத்தது போல மகிழ்ச்சியுடன் இருக்கிறதா, அதில் எழும் புதிய சிக்கல் என்ன, அதனை எப்படி மணி சரிசெய்கிறார் என்பது மீதிக்கதை.
முழு நீளக் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது ‘டிக்கிலோனா’. டைம் டிராவல் என்ற சைன்ஸ் பிக்ஷன் அம்சத்தை மிக எளிமையாகவும், கேலியாகவும் அனைவருக்கும் புரியும்படி காட்டியிருக்கிறார்கள். அதனால் அதில் பல லாஜிக் அபத்தங்கள் எழுகின்றன என்ற போதும், தனது காமெடியை மட்டுமே நம்பி இறங்கியிருக்கிறார் சந்தானம். அதுவே ஒரு கட்டத்திற்கு மேல் அலுத்துப் போகச் செய்கிறது. அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி கடந்த காலம், எதிர்காலம், வேறொரு டைம்லைன் என சிக்கலான திரைக்கதையைப் புரியும்படி சொன்னதற்காகப் பாராட்டுகள். அதே வேளையில், உருவக்கேலி, பெண்கள் மீதான பிற்போக்கான பார்வை என மிக மோசமான சமூக நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் படத்தை உருவாக்கியுள்ளார் கார்த்திக் யோகி. ’ஓ மை கடவுளே!’ என்ற படத்தின் திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்து, அங்கங்கே Men in Black, The Shawshank Redemption, KGF முதலான படங்களைக் கிண்டல் அடித்திருக்கிறார்கள்.
2027, 2020 என நம்பர்களிலும், பயன்படுத்தும் செல்போன், வாகனம், டாஸ்மாக் பார் எனச் சில இடங்களில் கால மாற்றத்தை உணர்த்தும் ‘டிக்கிலோனா’, காமெடி என்ற பெயரில் நிகழ்த்தும் கூத்து முகம் சுளிக்க வைத்திருக்கிறது. மன நலம் குறித்த விழிப்புணர்வு எழுந்து வரும் காலத்தில், மீண்டும் மன நோயாளிகளை வைத்து காமெடி செய்வது, வழக்கம்போல உருவக்கேலியைத் தனது சிக்னேச்சர் பாணியாக சந்தானம் முன்னிறுத்துவது எனப் பல காட்சிகள் இதில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைவிட, `மாடர்ன் பொண்ணு’ என்ற சித்தரிப்பில், நவீன கால பெண்கள் Daddy's little princess என்ற பெயரில் எந்தக் கண்டிப்பும் இல்லாமல் வளர்ந்து, கணவனுக்குக் கட்டுப்படாமல் பார்ட்டி, போதை எனத் திரிவதாகக் காட்சிப்படுத்தியிருப்பதோடு, சந்தானத்தைக் கலாச்சார வகுப்புகளையும் எடுக்க வைத்திருக்கிறார்கள். `குடும்பப் பெண்கள் எப்படி உடை உடுத்த வேண்டும்’ என்று 2027ஆம் ஆண்டுக்குச் சென்று ஆண்கள் வகுப்பு எடுக்க வேண்டுமா, மிஸ்டர் சந்தானம்? எத்தனை ஆண்டுகளுக்குக் காலப் பயணம் மேற்கொண்டாலும் ஆணாதிக்கத்தைக் கைவிட மறுக்கும் போக்கினை ‘டிக்கிலோனா’ வெளிப்படுத்தியிருக்கிறது.
மூன்று வெவ்வேறு வேடங்களில் நடித்திருக்கிறார் சந்தானம். ஏ1, பாரிஸ் ஜெயராஜ் முதலான படங்களில் பார்த்த அதே சந்தானம் தான் இதிலும் தெரிகிறார். தனக்கென்று ஒரு எல்லையை வகுத்து அதனைத் தாண்டிச் செல்லாமல், ஒரே பாணியிலான காமெடியைச் செய்து வருகிறார். ஹீரோயின்களாக வரும் அனகா, ஷிரீன் காஞ்ச்வாலா ஆகிய இருவரும் சந்தானத்தின் மனைவிகளாக, சந்தானத்தைக் காதலிப்பவர்களாகவும், திருமணத்திற்குப் பிறகு துன்புறுத்துபவர்களாகவும் வருகிறார்கள். அதனைத் தாண்டி இருவருக்கும் பெரிதாக வேலையில்லை. யோகி பாபு, மறைந்த நடிகர் அருண் அலெக்ஸாண்டர் ஆகியோர் சில காட்சிகளில் வந்தாலும், காமெடிக்கு வலு சேர்க்கிறார்கள்.
டைம் டிராவல் செய்த சந்தானத்தை மீண்டும் நிகழ்காலத்திற்குக் கொண்டு வரும் பொறுப்போடு, கடந்த காலத்திற்கு அனுப்பப்படும் ஆனந்த் ராஜ் - முனிஷ்காந்த் ஆகிய இருவரின் கூட்டணி ரசித்து, சிரிக்க வைக்கிறார்கள். இவர்கள் இருவரும் வரும் காட்சிகள் ரகளையாக இருக்கின்றன. `கே.ஜி.எஃப்’ படத்தின் தமிழ் டப்பிங்கில் வர்ணனை செய்த `நிழல்கள்’ ரவி இதில் அதே போன்ற வேடத்தில், முதல் காட்சியில் இருந்து கதையை அதே மாடுலேஷனில் வர்ணனை செய்து வருவதும், இறுதியில் அதற்குக் கொடுக்கப்பட்ட ட்விஸ்டும் ரசிக்கும்படியாக இருந்தது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இதில் கேமியோ செய்திருக்கிறார்.
`மைக்கேல் மதன காமராஜன்’ படத்தின் பாடலான ‘பேர் வெச்சாலும்’ பாடலைச் சிறப்பாக ரீமிக்ஸ் செய்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. எனினும், அந்தப் படத்தில் வரும் பாடல் காட்சியைப் போல, இதிலும் செய்ய முயன்றிருக்கிறார்கள். அதுவும் கைகூடவில்லை. யுவன் குரலில் `ஏதும் சொல்லாதே’ பாடல் நன்றாக வந்திருக்கிறது. பின்னணி இசையிலும், மற்ற பாடல்களிலும் யுவனின் பிரத்யேக டச் மிஸ்ஸிங்!
காமெடியை மட்டுமே நம்பி உருவாகியிருக்கும் ‘டிக்கிலோனா’ பொறுப்புடன் உருவாகியிருந்து, காமெடிக்கு அளிக்கப்பட்ட அதே கவனத்தைத் திரைக்கதைக்கும் செலுத்தியிருந்தால், இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.
`டிக்கிலோனா’ Zee5 தளத்தில் வெளியாகியுள்ளது.