அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டித் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நியூயார்க் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கனடாவின் லைலா பெர்னாண்டோசும், பிரிட்டனின் எம்மா ரடுகானுவும் நேருக்கு நேர் மோதினர். 18 வயதே நிரம்பிய எம்மா ரடுகானுவும், 19 வயதே நிரம்பிய லைலா பெர்னாண்டோசும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இந்த போட்டி டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 22 ஆண்டுகளுக்கு பிறகு பதின்ம வயது பெண்கள் இருவர் அமெரிக்க ஓப்பன் தொடரில் மோதிக்கொண்டனர்.




இறுதிப்போட்டி நேற்று நடைபெறுவதற்கு முன்பு எம்மா ரடுகானுவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும், காலில் காயம் ஏற்பட்டாலும் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு காலில் காயத்துடன் எம்மா களத்தில் இறங்கினார். நேற்று இரவு நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில், போட்டித் தொடங்கியது முதல் எம்மா ரடுகானுவும், லைலா இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இருவரும் ஆட்டத்தை விட்டுக்கொடுக்காமல் விளையாடினார். ஆனாலும், லைலாவை விட சிறப்பாக ஆடிய எம்மா ரடுகானு முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து, இருவருக்கும் இடையே இரண்டாவது செட்டிலும் எம்மா ரடுகானு லைலாவிற்கு கடும் நெருக்கடி அளித்தார். இதனால், இந்த செட்டையும் 6-3 என்ற கணக்கில் எம்மா ரடுகானு கைப்பற்றி அமெரிக்க ஓப்பன் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தார்.


தகுதிச்சுற்று போட்டி மூலம் வெற்றி பெற்று கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பங்கேற்ற வீராங்கனை ஒருவர், தனது முதல் தொடரிலே கோப்பையை கைப்பற்றியிருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த ஆட்டம் 1 மணி நேரம் 51 நிமிடங்கள் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற எம்மா ரடுகானு பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.




கடந்த 44 ஆண்டுகளில் ஒற்றையர் பிரிவு கிராண்ட்ஸ்லாம் கோப்பையை கைப்பற்றிய முதல் பிரிட்டன் வீராங்கனை என்ற சாதனையை எம்மா படைத்துள்ளார். கடைசியாக 1977-ஆம் ஆண்டு பிரிட்டன் வீராங்கனை விர்ஜினியா வேட் விம்பிள்டன் கோப்பையை கைப்பற்றியிருந்தார்.


தகுதிச்சுற்று போட்டி உள்பட மொத்தம் 10 போட்டிகளில் எம்மா ரடுகானு இந்த தொடரில் பங்கேற்றார். அவர் பங்கேற்ற 10 போட்டிளிலும் ஒரு செட்டை கூட அவர் இழக்கவில்லை என்பது அசாத்திய சாதனை ஆகும். இதற்கு முன்பு, தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனை ஒருவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதே இல்லை. ஆனால், எம்மா ரடுகானு இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுடன் கோப்பையையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். 2004-ஆம் ஆண்டு ரஷ்ய வீராங்கனை மரிய ஷரபோவா விம்பிள்டன் கோப்பையை கைப்பற்றிய பிறகு, மிக இளம் வயதிலே கிராண்ட்ஸ்லாம் கோப்பையை கைப்பற்றிய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.




2021-ஆம் ஆண்டு தொடக்கத்தில் டென்னிஸ் வீராங்கனைகளுக்கான தரவரிசையில் 345-வது இடத்தில் இருந்த எம்மா ரடுகானு, இந்த வெற்றி மூலம் தரவரிசையில் 30-வது இடத்திற்குள் முன்னேறி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்மாவின் தந்தை ரோமன் நாட்டைச் சேர்ந்தவர். தாய் சீனாவைச் சேர்ந்தவர். எம்மா ரடுகானு கனடாவின் டொரோன்டோவில் பிறந்தவர். பின்னர், அவரது குடும்பம் லண்டனுக்கு குடிபெயர்ந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கிராண்ட்ஸ்லாம் கோப்பையை கைப்பற்றிய எம்மா ரடுகானுவிற்கு டென்னிஸ் பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.