மலையாளத்தில் பிரபல திரைப்பட இயக்குநராக திகழ்ந்து வருபவர் பிரியதர்ஷன். மோகன்லால் நடித்த பூச்சாக்கொரு மூக்குத்தி என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமான பிரியதர்ஷன் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிப்படங்களை இயக்கி இருக்கிறார். நடிகர் கார்த்தியை வைத்து பிரியதர்ஷன் இயக்கிய சின்னமணிக்குயிலே படம் ரிலீசாகவே இல்லை. அதனை தொடர்ந்து கோபுரவாசலிலே என்ற தமிழ் படத்தை இயக்கினார். பின்னர் ஷியாம், திரிசாவை வைத்து பிரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் கடைசியாக பிரகாஷ் ராஜ் நடித்த காஞ்சிவரம் படத்தையும் இயக்கினார் பிரியதர்ஷன். அந்த படத்துக்காக தேசிய விருதையும் வென்றார். 2012-ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இவரது மகள் கல்யாணி பிரியதர்ஷனும் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வருகிறார். நாகார்ஜுனாவின் மகன் அகில் நடித்த ஹெலோ என்ற தெலுங்கு படம் மூலம் திரையுலகிற்கு அடியெடுத்து வைத்த அவர், சித்ரலஹாரி, ரனரங்கம் என அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் நடித்தார். 2019-ஆம் ஆண்டு மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார் கல்யாணி. அதனை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் வெற்றிபெற்ற வரனே அவசியமுண்டு படத்தில் நாயகியாக நடித்து மலையாள சினிமாவுக்கு எண்ட்ரி கொடுத்தார் கல்யாணி பிரியதர்ஷன்.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்துள்ள பெரும் பொருட் செலவில் தயாராகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் வரலாற்று ஆவணப் படமான மரைக்காயரில் நடித்து இருக்கிறார் கல்யாணி. பிரபல மலையாள இயக்குநர் வினீத் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் மோகன்லலின் மகன் பிரணவ் நடித்துள்ள ஹிருதயம் என்ற படத்திலும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்து இருக்கிறார். அந்த படமும் வெளியீட்டுக்காக காத்து உள்ளது.
அதேபோல் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து தீபாவளிக்கு வெளியாக இருக்கும் மாநாடு திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். அதைத் தொடர்ந்து ஸ்ரீஜித் இயக்கத்தில் மோகன்லால், பிரித்துவிராஜ், மீனா, உன்னி முகுந்தன் நடிக்கும் மலையாள படமான பிரோ டேடியில் நடித்து வருகிறார் கல்யாணி. தெலுங்கு படமான ஹெலோவில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நாயகிக்கான சைமா விருது, சிறந்த அறிமுக நாயகிக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். தற்போது தந்தை பிரியதர்ஷனை போல், தமிழ், தெலுங்கு, மலையாளத்தை தொடர்ந்து இந்தியில் கால் பதிக்க இருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.
இந்தியில் பிரபல இயக்குநராக, தயாரிப்பாளராக பிரியதர்ஷன் திகழ்ந்து வந்தாலும், அவரது படத்தில் கல்யாணி அறிமுகமாக விரும்பவில்லை என்றும், இந்த முடிவை கல்யாணி ப்ரியதர்ஷனே எடுத்ததாகவும், அதை தான் மதிப்பதாகவும் தந்தை ப்ரியதர்ஷன் தெரிவித்திருக்கிறார்.