கடந்த 17,18ம் தேதிகளில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து அப்பகுதி மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்ததால் தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தாமிரபரணி ஆற்றுநீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். 

 

இதனால் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட மக்களுக்கு குடும்பத்தினருக்கு ரூ.6,000 என்றும், மற்றவர்களுக்கு ரூ.1000 என்றும் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள், தனியார் அமைப்புகள் சார்பில் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 

 

அதில் ஒரு பகுதியாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விஜய்யை தொடர்ந்து அவரது வரிசையில் நடிகர் பிரசாந்த் தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் நெல்லை மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரசாந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்து பேசிய பிரசாந்த், ”மக்களை சந்தித்து இப்படி உதவி செய்வது மகிழ்ச்சியை கொடுக்கிறது. எப்பொழுதும் இதை செய்து வருகிறேன். ஆனால், மீடியா கண்களுக்கு இன்று தான் தெரிகிறது” என்றார். 

 

தொடர்ந்து விஜய்யுடன் நடிக்கும் கோட் படம் பற்றிய பேசிய அவர், சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுப்பதால் எல்லாம் பழையபடி மாறும் என்றார். மேலும்,  ”தற்போது விஜய்யுடன் The Greatest of All Time படத்தில் இணைந்து நடித்து வருகிறேன். படம் நல்லா வந்துட்டு இருக்கு. தற்போது, மக்களுக்கு பலர் உதவி செய்வதை பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது. இதில் இருந்து பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். பேரிடர்கள் காலங்களில் அரசு அதற்கேற்பத்தான் பல விஷயங்களை மக்களுக்காக செய்து வருகிறது. நடிகர்களும் தொடர்ந்து உதவிகளை செய்து வருவது சந்தோஷத்தை கொடுக்கிறது” என கூறினார். 

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் பிரசாந்த் இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளிவந்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் பிரசாந்த் நடித்துள்ளார். அதை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். படம் இன்னும் ரிலீசாகாத நிலையில் கோட் படத்தில் பிரசாந்த் இணைந்துள்ளார். 

 

இதேபோல் நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்திரன் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, கூட்ட நெரிசலால் டி.ராஜேந்திரன் மயங்கி விழுந்தார். உடனதியாக தண்ணீர் கொடுத்து முதலுதவி அளிக்கப்பட்ட டி.ராஜேந்திரன், காரில் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.