விஜயகாந்த் மறைவு


2023 ஆம் ஆண்டு இறுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியாக வந்து சேர்ந்தது நடிகர் விஜயகாந்தின் மறைவு. ஊடகங்கள், மக்கள் என எல்லா இடத்திலும் விஜயகாந்த் என்கிற ஒரே பெயர் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டிருந்தது, அரசியல் தலைவர்கள், நடிகர்கள் , விஜயகாந்தை ஒரு நடிகராக ஒரு அரசியல் தலைவராக ஏற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் விஜய்காந்துக்கு தங்களது அஞ்சலியை செலுத்தினார்கள். இப்படியான நிலையில் ஒரு சில நடிகர்கள் அவருக்கு நேரடியாக அஞ்சலி செலுத்தாதது சினிமா வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது. நடிகர் தனுஷ், சூரியா, அஜித் குமார், கார்த்தி உள்ளிட்டவர்கள் வெளிநாடுகளில் இருந்த காரணத்தினால் விஜயகாந்தின் உடலை நேரில் வந்து பார்க்க முடியாமல் போனதாக தெரிவிக்கப் பட்டது. 


மறுபக்கம் சினிமா ஆர்வலரான ப்ளூ சட்டை மாறன் தனுஷ் , சூர்யா , அஜித் உள்ளிட்டவர்கள் படப்பிடிப்பை முடித்து நேரம் இருந்தபோதும் புத்தாண்டை வெளிநாடுகளில் கொண்டாட திட்டமிட்டிருப்பதால் விஜயகாந்தின் உடலை நேரில் வந்து பார்ப்பதை தவிர்த்துவிட்டார்கள் என்று விமர்சித்திருந்தார். மேலும் நடிகர் சூர்யா வெளிநாட்டில் காரில் சென்றுகொண்டே வீடியோ வெளியிட்டிருந்ததையும் அவர் கடுமையாக சாடியிருந்தார்.  


வைரலாகும் அஜித் நடனமாடும் வீடியோ


நடிகர் அஜித் குமார் தற்போது துபாயில்  நடைபெறும்  விடாமுயற்சி படத்தின் ஷூட்டில் பிஸியாக இருந்து வருவதால் அவரால் நேரில் வரமுடியாமல் போனது. மேலும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு செல்ஃபோனில் அழைத்து அஜித் இரங்கல் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. தற்போது புத்தாண்டு இரவில் நடிகர் அஜித் குமார் துபாயில் ஒரு பார்ட்டியில் நடனமாடும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில் பகிர்ந்து வருகிறார்கள். அதே நேரத்தில் விஜயகாந்த் ரசிகர்கள் அஜித் குமாரின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.


விடாமுயற்சி


மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விடாமுயற்சி. த்ரிஷா , அர்ஜூன், ஆரவ் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. நிரவ் ஷா, ஓம் பிரகாஷ் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்கள்.