கோட் (G.O.A.T)


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கோட் படம் உருவாகி வருகிறது. இரட்டை வேடங்களில் விஜய் நடிக்க சினேகா, பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, பிரேம்ஜி, வைபவ், மீனாக்‌ஷி செளத்ரி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்க, ஏ.ஜி எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. 


விமர்சனங்களைப் பெறும் போஸ்டர்கள்


தாய்லாந்து , சென்னை, ஹைதராபாத் என இந்தப் படத்தில் படப்பிடிப்பு  நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகின. இந்தப் போஸ்டர் ஹாலிவுட்டின் வில் ஸ்மித் நடித்த ஜெமினி மேன் படத்தின் போஸ்டர் போல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இந்த விமர்சனங்களை மிக கூலாக எதிர்கொண்டுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.


விஜய் இளையராஜா






தற்போது கோட் படத்தின் புதிய தகவல் ஒன்று இணையதளத்தில் பரவி வருகிறது. இந்தப் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஜய் மற்றும் இளையராஜா இணைந்து பாட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. முன்னதாக விஜய் நடித்த காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, ஃப்ரண்ட்ஸ் உள்ளிட்ட படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். மேலும் இந்தப் படங்களில் விஜய்க்கு பாடல்கள் பாடியுமுள்ளார் இளையராஜா.


இதனைத் தொடர்ந்து தற்போது சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தில் இளையராஜா பாட இருக்கிறார். அதேபோல் இளையராஜா இசையில் விஜய் பாடிய என்னை தாலாட்ட வருவாளா மற்றும் ஃப்ரண்ட்ஸ் படத்தில் இடம்பெற்ற ருக்கு ஜா உள்ளிட்ட பாடல்களுக்கு இன்றும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், இந்த முறை இளையராஜா மற்றும் விஜய்யின் குரலை ஒரே பாடலில் கேட்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்தப் பாடலை கங்கை அமரன் எழுதியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


தற்போது இளையராஜா - வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு இசையமைத்து வருகிறார். முதல் பாகத்தில் இளையராஜா இசையமைத்த காட்டுமல்லி, உன்னோட நடந்தா ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்து ஹிட்லிஸ்ட்டில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.