நடிகர் சல்மான் கானை கட்டியணைத்து வரவேற்றதை கண்டு ரஜினிகாந்த் கோபித்து கொண்டதாக நடிகை ரம்பா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரபலமாக திகழ்ந்த நடிகைகளுள் ஒருவர் ரம்பா. அவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டிலாகி விட்டார். இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் ரஜினிகாந்த் தன்னிடம் கோபித்து கொண்ட நிகழ்வை வெளிப்படுத்தியுள்ளார். ரஜினி - ரம்பா இருவரும் இணைந்து 1997 ஆம் ஆண்டு வெளியான அருணாச்சலம் படத்தில் நடித்திருந்தனர்.
இதனிடையே அந்த நேர்காணலில் பேசிய ரம்பா, “நான் ரஜினிகாந்துடன் அருணாச்சலம் படத்தில் நடித்த அதே சமயத்தில் இந்தி நடிகர் சல்மான் கானுடன் பந்தன் என்னும் படத்தில் நடித்தேன். இரண்டு படத்தின் ஷூட்டிங்கும் ஹைதராபாத்தில் தான் நடந்தது. காலை முதல் மதியம் வரை அருணாச்சலம் படமும், அதற்கு பிறகு பந்தன் படத்தின் ஷூட்டிங்கிலும் நான் பங்கேற்று வந்தேன். இதில் பந்தன் படத்தில் சல்மான் கான் எனக்கு ஜோடியாகவும், ஜாக்கி ஷெராஃப் அண்ணனாகவும் நடித்திருப்பார். ஒருநாள் இருவரும் அருணாச்சலம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்தனர்.
மும்பையில் பொதுவாக உறவினர்களை வரவேற்க கட்டியணைத்து வரவேற்பது வழக்கம். அந்த மாதிரி சல்மான் கான், ஜாக்கி ஷெராஃப் என்னுடைய ஹீரோக்கள் தான். அதனால் அவர்களை கட்டியணைத்து வரவேற்றதை தூரத்தில் இருந்து ரஜினிகாந்த் பார்த்து கொண்டிருந்தார். இருவரும் வந்து ரஜினி, சுந்தர் சி இருவரையும் பார்த்து பேசி விட்டு போய் விட்டனர்.
அவர்கள் இருவரும் சென்ற பிறகு சீரியஸான பேச்சு ஒன்று போய் கொண்டிருந்தது. அதாவது ரஜினி தான் வைத்திருந்த துண்டை கோபத்தோடு தூக்கி எறிந்தார். அங்கிருந்த சுந்தர் சி மற்றும் அனைவரும் என்னையும் பார்க்கிறார்கள், ரஜினியையும் பார்க்கிறார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ரஜினியை சமாதானம் செய்கிறார்கள்.
கொஞ்ச நேரம் கழித்து ஒளிப்பதிவாளர் வந்து, ‘என்ன ரம்பா இப்படி பண்ணிட்டீங்க?ன்னு சொன்னார். எனக்கு நாம என்ன பண்ணோம்ன்னு எதுவும் விளங்கவில்லை. ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் வந்தோம், வசனம் சரியா தான் பேசினோம் வேற என்ன பிரச்சினைன்னு தெரியலையேனு நினைச்சிட்டே ரஜினியிடமே கேட்டு விட்டேன். அவர் என்னை கொஞ்சம் அமைதிப்படுத்தி விட்டு, யூனிட்ல இருந்து வந்த எல்லாரையும் கூப்பிட்டார்.
அனைவர் மத்தியிலும், காலையில சல்மான் கான் வந்தபோது ரம்பா எப்படி ஓடிப்போய் கட்டிப்பிடித்து வரவேற்றார் என்பதை நடித்துக் காட்டினார். நம்ம செட்டுக்கு வந்தால் எப்படி ஒரு லிமிட்டோட இருக்கிறார். அவங்க வட இந்திய ஹீரோக்கள்ன்னா அப்படி பண்ணுவீங்க, இங்க தென்னிந்திய ஹீரோக்கள்ன்னா குட் மார்னிங் சாருன்னு சொல்லிட்டு புக் படிப்பியா? - எங்களை பார்த்தா கேவலமா போச்சான்னு கேட்டார்” என கூறியுள்ளார்.