திரைப்பட இயக்குனரும் குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து சென்னையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். டப்பிங் பேசிய போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. பின்னர் தனது காரிலேயே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலானது சென்னையில் நேற்று மாலை வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் பல்வேறு திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அவரது மரணம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சென்னையில் இருந்து அவருடையை சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள பசுமலை தேரி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. இன்று காலை சுமார் 6 மணி அளவில் அவரது சொந்த ஊரான பசுமலைத்தேரி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
புத்தகங்களை படிப்பதால் குற்ற செயல்கள் குறையும் - அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்
பின்னர் அவரது உடலுக்கு ஏராளமான பொதுமக்கள், உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் என அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் மாரிமுத்துவின் உடலுக்கு திரைப்பட நடிகர் விமல் நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தனது இரங்கலை தெரிவித்தார். மேலும் தனியார் தொலைக்காட்சியில் வருகிற நாடகத்தின் மூலம் பொதுமக்கள் மத்தியில் பிரபலம் அடைந்ததால் பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் பசுமலைதேரி அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு சடங்குகள் நடத்தி மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மயானத்தில் மாலை 4 மணியளவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.