புத்தகங்களை படிப்பதால் குற்ற செயல்கள் குறையும் என்று தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


தருமபுரி வள்ளலார் திடலில் ஐந்தாவது புத்தகத் திருவிழாவை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இன்று (09.09.23) தொடங்கி வைத்தார்.


தருமபுரி மாவட்ட நிர்வாகம்,  தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து தருமபுரி வள்ளலார் திடலில் இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரை புத்தகத் திருவிழாவை நடத்துகிறது.


இந்த புத்தகத் திருவிழாவை தொடக்க விழா இன்று நடைபெற்றது. மாநில வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் புத்தகத் திருவிழா அரங்குகளை திறந்து வைத்து, இது தொடர்பாக நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.


தமிழக அரசு மாவட்டங்கள் தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்துவதற்கு நிதி உதவி அளித்து வருகிறது. இதற்காக 8 கோடியே 45 லட்சம் ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளது.


தருமபுரியில் நடைபெறும் புத்தக திருவிழாவிற்கு அரசு சார்பில் ரூபாய் 20 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.  இது போன்ற அறிவு சார்ந்த அறிவு வளர்ச்சிக்கு உதவி புரியும் புத்தக திருவிழாக்களுக்கு உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.


புத்தகங்கள் படிப்பதால் வாழ்வியல் நடைமுறைகள் மேம்பாடு அடைகிறது.  தொடர்ந்து புத்தகங்கள் படிப்பதால் நினைவாற்றல் வளர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்தவர்களாக விளங்க வழிவகை செய்கிறது.


தமிழக அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 11,252 மாணவிகள் மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் பெற்று பயனடைந்து வருகின்றனர். 


இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் பள்ளிகளில் காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.




தருமபுரி மாவட்டத்தில் 1124 பள்ளிகளில் திட்டத்தின் மூலம் 44 ஆயிரம் மாணவ மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட நூலகங்களில் உள்ள பழுதுகள் நீக்கப்பட்டு அனைத்தும் புது பொலிவுடன் செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


தமிழகத்தில் இந்த மாதம் 15 ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழக முதல்வர் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார். சென்ற ஆண்டு தருமபுரியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூபாய் ஒரு கோடியே 29 லட்சத்திற்கு 60,000 புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டது. 


இந்த ஆண்டும் அனைத்து தரப்பினரும் தருமபுரி புத்தகத் திருவிழாவிற்கு வருகை புரிந்து புத்தகங்களை வாங்கி படித்து அறிவாற்றலை பெருக்கிக் கொள்ள வேண்டும். என்றார் அமைச்சர்.


இப்புத்தகத் திருவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.