இந்திய பங்குச்சந்தையின் மொத்த மதிப்பு வரலாற்றில் முதன்முறையாக  ரூ.3 கோடியே 15 லட்சம் கோடியை எட்டியுள்ளது.


இந்திய பங்குச்சந்தை:


உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், திடமான பெருநிறுவன வருவாய் மற்றும் முன்னெப்போதும் இல்லாத அளவில் சில்லறை வர்த்தகத்தில் அதிகரித்த முதலீடு ஆகியவற்றால் நாட்டின் பங்குச் சந்தை மதிப்பு இதுவரை இல்லாத அளவிலான புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, இந்திய பங்குச்சந்தையின் மொத்த மதிப்பு 3.8 டிரில்லிய அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ.3 கோடியே 15 லட்சம் கோடியை எட்டியுள்ளது. நாட்டின் தொடர் வளர்ச்சியானது பல வளர்ந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது அது நேர் எதிராக உள்ளது.  அண்டை நாடான சீனாவோ, உலக முதலீட்டாளர்களுக்கு விரக்தியின் ஆதாரமாக மாறியுள்ளது. 


மும்மடங்கு வளர்ச்சி:


கொரோனா தொற்று காரணமாக மார்ச் 2020 இல் பெரும் வீழ்ச்சியை கண்ட இந்திய பங்குச்சந்தை, மூன்றே ஆண்டுகளில் அதன் மதிப்பை கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயர்த்தி, உலகின் ஐந்தாவது பெரிய பங்குச் சந்தையாக உள்ளது என ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே காலகட்டத்தில் அமெரிக்கா தனது சந்தை மூலதனத்தை இருமடங்காகக் உயர்த்தியுள்ளது. சந்தையில் தொடரும் நேர்மறையான தாக்கத்தின் மூலம் என்எஸ்இ நிஃப்டி 50 குறியீடு கடந்த மூன்று மாதங்களில் டாலர் மதிப்பில் கிட்டத்தட்ட 6 சதவீதம் உயர்ந்துள்ளது,


காரணம் என்ன?


நடப்பாண்டில் இதுவரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டும் நிகர அடிப்படையில் 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது 1.3 லட்சம் கோடி மதிப்பிலான இந்திய பங்குகளை வாங்கியுள்ளனர்.  இது மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிலான வெளிநாட்டு முதலீடாகும். கூடுதலாக, ஆகஸ்ட் மாதத்தில், வெளிநாட்டு நிதிகள் உலகளாவிய விற்பனையின் மத்தியில் ஆசியாவை சேர்ந்த மற்ற எல்லா சந்தைகளிலும் பங்குகளை விற்கப்பட்ட நிலையில், இந்தியா மட்டும் தனித்து நின்றது. 


ஜி20 உச்சி மாநாடு:


உலக பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாட்டின் பங்குச் சந்தை மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சம் எட்டியுள்ளது. இந்தியா, விரைவில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருளாதார நாடாக மாறும் என பிரதமர் மோடி தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் புதிய உச்சத்தை எட்டி இருப்பது,  இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை தெளிவாக காட்டுவதாக பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.


எதிர்வரும் ஆபத்து?


இந்தியாவிற்கு எதிர்கால சந்தையில் பல்வேறு ஆபத்துகள் உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.  தக்காளி முதல் வெங்காயம் வரையிலான அன்றாடப் பொருட்களின் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் ஏற்கனவே கலக்கமடைந்துள்ளனர். இந்நிலையில்,  மத்திய வங்கியின் பணவீக்கத்தை மோசமாக்கும் வகையில் மீண்டும் எழும் கச்சா எண்ணெய் விலைகள் அச்சுறுத்துகின்றன. இதற்கிடையில் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என எச்சரித்துள்ளனர்.