பிரதமர் மோடி ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என்ற பெயர் பலகையை பயன்படுத்தியது தொடர்பாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.


ஜி20 உச்சி மாநாடு: 


உலக பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு, உச்சி மாநாடு டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியபோது, அவரது இருக்கையில் இருந்த பெயர் பலகையில் இந்தியா என்பதற்கு பதிலாக ”பாரத்” என குறிப்பிடப்பட்டு இருந்தது. உலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பங்கேற்ற மாநாட்டில் ”இந்தியா” என்ற சொந்த நாட்டின் பெயரே தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



உதயநிதி விமர்சனம்:


இந்தியா என்ற பெயர் ஜி20 மாநாட்டில் தவிர்க்கப்பட்டது தொடர்பாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், 9 வருடங்களுக்கு முன்பாக சொன்னாரல்லவா, இந்தியாவை மாற்றி  காட்டுகிறேன் என்று, அதான் மாற்றிவிட்டார். சொன்னதை செய்து விட்டார், பிரதமருக்கு வாழ்த்துகள்” என கூறினார்.


சனாதன விவகாரம்:


சனாதனம் தொடர்பான பேச்சு குறித்து பாஜக தரப்பில் ஆளுநரிடம் புகார் அளித்தது தொடர்பான கேள்விக்கு, “திமுக என்ற கட்சியே அதற்காக தொடங்கப்பட்டது தான். ஆட்சியை பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை எல்லாம். எப்போதும் கொள்கைக்காக நிற்போம்” என்றார். அம்பேத்கர் பேசாததையோ, அண்ணா பேசாததையோ நான் பேசிவிடவில்லை. பாஜகவை பேசுவது எல்லாம் பொய், செய்திகளை திரித்து பொய் செய்திகளை பரப்புவது தான் முழு நேர வேலை. என்னோடு ஒரே கேள்வி சனாதன விவகாரத்தில் அதிமுகவின் பதில் என்ன? அவர்களுடைய கட்சி பேரில் அண்ணாவின் பெயர் உள்ளது. அண்ணா சனாதன தர்மத்தை எதிர்த்து ஏராளமான கருத்துகளை தெரிவித்துள்ளார். எனவே சனாதன விவகாரத்தில் அதிமுகவின் கருத்து என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என உதயநிதி கூறியுள்ளார்.



”பாரத்” விவகாரம்:


எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு I.N.D.I.A என பெயர் சூட்டியுள்ள நிலையில், அதனை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து இருந்தனர். இந்நிலையில் தான் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என்ற பெயரையே இனி பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தான், ஜி20 மாநாட்டில் பங்கேற்க வரும் தலைவர்களுக்கு விருந்து வழங்குவது தொடர்பாக, குடியரசு தலைவர் வழங்கிய அழைப்பிதழில் இந்தியா என்ற பெயர் தவிர்க்கப்பட்டு இருந்தது. அதோடு, ஆசியான் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரலிலும் இந்தியா என்ற பெயர் தவிர்க்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்ததோடு, இந்தியா ஒன்றும் பாஜகவின் தனிப்பட்ட சொத்து இல்லை எனவும் விமர்சித்து வந்தன. இந்நிலையில் தான்ம் ஜி20 உச்சி மாநாட்டிலேயே இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என்ற பெயர் பலகையை பிரதமர் மோடி பயன்படுத்தியுள்ளார்.