தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமான இசையமைப்பாளராக உள்ள ஸ்ரீகாந்த் தேவா, தான் இசையமைக்க வந்தது எப்படி என்பதை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பிரபுதேவா நடித்த டபுள்ஸ் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த் தேவா. இசையமைப்பாளர் தேவாவின் மகன் என்ற அடையாளத்தோடு அறிமுகமான அவர், தனது தனித்துவமான இசையால் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானார். மேலும் விஜய், அஜித், ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். கானா பாட்டுக்கு எப்படி தேவாவோ, அந்த மாதிரி பார்ட்டி பாடல்களுக்கு ஸ்ரீகாந்த் தேவா என கொண்டாடப்பட்டார். இவருக்கு கருவறை என்னும் குறும்படத்துக்கு இசையமைத்ததற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதனால் ஸ்ரீகாந்த் தேவா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.
இசையமைக்க வந்தது எப்படி?
இப்படியான நிலையில், ஸ்ரீகாந்த் தேவா தான் சினிமா துறைக்குள் வந்தது எப்படி? என்பது குறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், “நான் சினிமாவுக்கு ரொம்ப ஈசியா தான் வந்தேன். அது உண்மை தான். அதுக்கு காரணம் எங்க அப்பா தேவா தான். அவருடைய முதல் படம் கிடைக்கும் போது நான் 7 ஆம் வகுப்பு தான் படிச்சிட்டு இருந்தேன். வீட்டுல இருக்க இசை கருவியில் நான் கைவைத்தால் திட்டுவார். காரணம், அவருக்கு முதல் பட சான்ஸ் கிடைக்க கஷ்டமா இருந்துச்சு.
நானும் இந்த துறையில் வந்தால் கஷ்டப்படுவான்னு அப்பா என்னை வேற மாதிரி படிக்க வைக்க பிளான் போட்டார். ஆனால் ‘மனசுக்கேத்த மகராசா’ படம் வாய்ப்பு கிடைத்தது. நானும் படிப்பை விட்டு விட்டு அப்பாவுடன் சேர்ந்து விட்டேன். நிறைய படம் கீபோர்ட் வாசிச்சிட்டு இருந்தேன். அப்படியாக ஒருநாள் இயக்குநர் பாண்டியராஜன் வந்து என்னிடம் அடுத்து என்ன பண்ணப்போற? என கேட்டார். நான் இசை தான் என சொன்னேன். அடுத்த ஒரு வாரத்திலேயே வாய்ப்பு கொடுத்தார்.
என்னை கையைப் பிடித்து அப்பாவிடம் இழுத்துச் சென்று வாய்ப்பு கொடுப்பதை பற்றி சொன்னார். பிரபுதேவா கால்ஷீட் கிடைச்சிருக்கு. டபுள்ஸ் படம் தான் அது என பாண்டியராஜன் விவரத்தை சொன்னார். அப்பாவுக்கு 40 வயதில் கிடைத்த சான்ஸ், எனக்கு 20 வயதில் கிடைத்ததை கண்டு அப்பா பெருமைப்பட்டார். நான் உங்களால தானே இந்த வாய்ப்பு கிடைத்தது என சொன்னேன். அவரோ, உன்னுடைய திறமைக்கு தான் கிடைத்தது என பாராட்டினார்.
விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
எனக்கு பிப்ரவரி 20 ஆம் தேதி திருமணம் நடந்துச்சு. அது முடிந்ததும் பெரிய ஹீரோ நடிச்ச படம் புக் ஆச்சு. உடனே என் மனைவியிடம் நீ வந்த ராசி தான் என சொன்னேன். அவரும் சந்தோஷப்பட்டார். ஆனால் அடுத்த 2 நாட்களில் வேறொரு இசையமைப்பாளர் பெயர் போட்டு போஸ்டர் வந்துச்சு. நான் எப்படிடா இதனை மனைவியிடம் சொல்வது என தெரியாமல் கவலைப்பட்டேன். அதனை அவமானம் சொல்ல முடியாது. த்ரில்லர் படம் என்பதால் நாம் செட்டாக மாட்டோம் என நினைத்து விட்டார்கள் போல நினைத்து விட்டேன்.
மனைவிக்கு தெரியாத மாதிரி பேப்பரை எல்லாம் ஒளித்து வைத்தாலும் அவருக்கு விஷயம் தெரிந்து விட்டது. என்னிடம் வருத்தப்பட்டு கேட்டார்கள். நான் நமக்கு எது கிடைக்கணுமோ அது கிடைக்கும் என பாசிட்டிவாக பேசி ஆறுதல் சொன்னேன்.அதிலிருந்து 2 நாட்கள் கழித்து ஒரு கால் வருகிறது. நான் விஜய் பேசுகிறேன் என சொன்னதும் செம ஷாக். நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம். உங்க பாட்டு எல்லாம் எனக்கு பிடிச்சிருக்கு என சிவகாசி பட விவரத்தை தெரிவித்தார். அந்த படம் எனக்கொரு திருப்புமுனையாக அமைந்தது” என ஸ்ரீகாந்த் தேவா தெரிவித்தார்.