ஆணோ, பெண்ணோ அவர்களின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு தருணம் திருமணம் ஆகும். குறிப்பிட்ட வயதுக்கு மேல் அந்த திருமணம் நடைபெறாவிட்டால் ஆணோ, பெண்ணோ பல சிரமங்களை சந்திக்க நேரிடும். திருமணம் நடைபெறாதவர்களை சுற்றி நடக்கும் சுற்றத்தார், உறவினர்கள் என பலருடைய  கேலிகளும், கேள்விகளும் மிகுந்த வேதனைக்குரியதாக இருக்கும்.


துணையற்றோரின் வலி:


இன்றைய சூழலில், பலருக்கும் கேலி மற்றும் கிண்டலுக்குரிய ஒரு விளையாட்டு பொருளாக மாறி நிற்பது 90களில் பிறந்தவர்களின் திருமணம். 90ஸ் கிட்ஸ் எனப்படும் 90களில் பிறந்த பல ஆண்களுக்கும், பெண்களுக்கும் இன்று வரை திருமணம் நடைபெறாமல் இருப்பதே அதற்கு காரணம். 30 வயதை கடந்த ஒரு ஆண் திருமணத்திற்காக காத்திருக்கும் வலியை மிக அழகாக சொன்ன பாடல் பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் பாடல்.


ராஜகுமாரன் இயக்கத்தில் வெளியான நீ வருவாய் என படத்தில் இடம்பெற்ற பா.விஜய் எழுதிய இந்த பாடல், திருமண வயதை கடந்த ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் ஏக்கத்தை சொல்லும் பாடலாக அமைந்திருக்கும்.


"பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்..


நீ வருவாயென..


பூத்துப் பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன்..


நீ வருவாயென.."


என பாடலின் தொடக்க வரிகள் அமைந்திருக்கும்.


தனக்கான துணையை எப்போது சேர்வோம் என்று ஆண்/ பெண் காத்திருக்கும் தவிப்பையே உன்னை எதிர்பார்த்து என் கண்கள் பூத்திருக்கிறது என்று முதல் வரியாக அழகாக எழுதியிருப்பார். அதற்கு அடுத்த வரிகளில்  தினம், தினம் பூக்கும் பூவைப் போல உன்னிடம் சிரிப்பதற்காக சிரிப்பையும் சேர்த்து வைத்துள்ளேன் என்று கவிஞர் எழுதியிருப்பார்.


நீ வருவாயா?


அதற்கு அடுத்த வரிகளில்,


"தென்றலாக நீ வருவாயா..


ஜன்னலாகிறேன்..


தீர்த்தமாக நீ வருவாயா..


மேகமாகிறேன்..


வண்ணமாக நீ வருவாயா..


பூக்களாகிறேன்..


வார்த்தையாக நீ வருவாயா


கவிதை ஆகிறேன்.."


என்று பா.விஜய் எழுதியிருப்பார்.


அதாவது, சில விஷயங்கள் இருந்தால் மட்டுமே சில விஷயங்கள் அழகு. ஒன்று இல்லாவிட்டாலும் மற்றொன்று அழகாக அமையாது. அந்த இணையை ஒப்பிட்டு கவிஞர் அழகாக எழுதிய வரிகளே மேலே இருப்பவை. அதாவது, அவள் தென்றலாக வந்தாள் அவளை வரவேற்க நான் ஜன்னலாக மாறுகிறேன் என்றும், மழை நீர் என்று பொதுவாக குறிப்பிடாமல் கோயில்களில் சாமிக்கு செய்யும் பூஜையின் தீர்த்தமாக நீ மாறுகிறாய் என்றால், அந்த தீர்த்த நீரை தரும் மேகமாகவே நான் மாறுவேன் என்றும், வண்ணங்களாக நீ வந்தால் அதை தாங்கி அதற்கு அழகு சேர்க்கும் பூக்களாக மாறுவேன் என்றும், வார்த்தைகளாக நீ வந்தால் அதை அழகாக்கும் கவிதையாக நான் மாறுகிறேன் என்று தன் வருங்கால மனைவிக்காக/கணவனுக்காக காத்திருக்கும் துணையை எவ்வாறு எல்லாம் பார்த்துக் கொள்வேன் என்பதை மிக அழகாக கவிஞர் வர்ணித்திருப்பார்.


அடுத்த வரிகள் மணப்பெண்ணுக்காக காத்திருக்கும் மணமகன் பாடுவது போலவே கவிஞர் எழுதியிருப்பார். இந்த வரிகள் ஆண்கள் பாடுவது போலவே அமைந்திருக்கும்.


தினமும் யோசிக்கிறேன்:


அவளிடம் தருவதற்காக கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்களை சேர்த்து வைத்திருக்கிறேன் என்றும், அவள் பொழுதுபோக்கிற்காக படிப்படிதற்கு குமுதமும், விகடனும் சேர்த்து நானே அதன் வாசகன் ஆகிவிட்டேன் என்றும், உனக்காக சொல்வதற்கு கவிதை புத்தகங்கள் வாங்கி நீ கோலமிடுவதற்காக கோலப்புத்தகமும் சேர்த்து வாங்கி வைத்துள்ளேன் என்றும், நிஜத்தில் வராத உன்னிடம், கனவில் நீ வரும்போது என்ன பேசலாம் என்பதை நாள்தோறும் பகல் பொழுதில் யோசிக்கிறேன் என்றும், வீட்டின் வாசலில் காகம் வந்தால் கூட நீ தான் வருகிறாயோ? என்று வாசலை பார்க்கிறேன் என்று கவிஞர் பா.விஜய் மிக யதார்த்தமாகவும், அழகாகவும் எழுதியிருப்பார்.


அந்த வரிகளே,


"கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள்..


உனக்கென தினம்தினம் சேகரித்தேன்..


குமுதமும் விகடனும் நீ படிப்பாயென


வாசகனாகிவிட்டேன்..


கவிதை நூலோடு கோலப் புத்தகமும்


உனக்காய் சேமிக்கிறேன்..


கனவில் உன்னோடு என்ன பேசலாம்..


தினமும் யோசிக்கிறேன்..


ஒரு காகம் காவென கரைந்தாலும்..


என் வாசல் பார்க்கிறேன்.."


என்று எழுதியிருப்பார்.


1999ம் ஆண்டு இந்த பாடல் வெளியானபோது, செல்போன்கள், சமூக வலைதளங்களின் பயன்பாடு இல்லாத காலகட்டம். அந்த காலத்தில் பெரும்பாலானோர் புத்தகங்கள் படிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர். அப்போது, பெரும்பாலான வீடுகளில் தவிர்க்க முடியாத புத்தகமாக கோலப்புத்தகமும் இடம்பெற்றிருக்கும். அது மட்டுமின்றி இப்போது வரை கிராமப்புறங்களில் வீட்டு வாசலில் காகம் கரைந்து கொண்டே இருந்தால், வீட்டிற்கு யாரோ ஒருவர் விருந்தினர் வருவார் என்று கருதும் பழக்கம் இருந்து வருகிறது. இதையே கவிஞர் பா.விஜய் மிக அழகாக வரிகளாக எழுதியிருப்பார்.


நிலவுக்கும் ஜோடியில்லை:


அதற்கு அடுத்த வரிகள் தனிமையின் வலிகளை மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பார் கவிஞர் பா.விஜய். அந்த வரிகளே,


"எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும்..


நிலவுக்கும் ஜோடியில்லை..


எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட..


கவிதைக்கும் கால்களில்லை.."


என்று எழுதியிருப்பார்.


அதாவது, நிலவு என்னதான் பிரகாசமாக அழகாக தெரிந்தாலும், அது தனியாகத்தான் இருக்கிறது. அதுபோல, துணையின்றி தவிக்கும் என் தவிப்பை அந்த நிலவு மட்டும்தான் அறியும். தனிமையின் கொடுமையை அந்த நிலவு மட்டுமே அறியும் என்று கவிஞர் எழுதியிருப்பார். மேலும், உனக்காக நான் ஒவ்வொரு நாளும் எழுதும் என் காதல் கவிதைகள் உன்னிடம் வந்து சேர்ந்திட துடித்தாலும், அந்த கவிதைக்கு கால்கள் இல்லையே என்று கவிஞர் எழுதியிருப்பார்.


நீ யாரடி?


இந்த உலகில் நூறு கோடி பெண்கள் இருந்தாலும் எனக்கானவளே நீ எங்கே இருக்கிறாய்? இந்த நூறு கோடியில் நீ யாரடி? உனக்காக அணுதினமும் நான் காத்திருக்கிறேன். உன் பாதச்சுவடு பதிந்த தடம் எங்கே இருக்கிறது? மணி பார்த்து, உந்தன் வருகைக்காக வழி பார்த்து, என் இரு விழிகளும் தவிக்கிறது என்பதை


"உலகில் பெண் வர்க்கம் நூறு கோடியாம்..


அதிலே நீ யாரடி..


சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன்..


எங்கே உன் காலடி..


மணி சரிபார்த்து தினம் வழிபார்த்து..


இரு விழிகள் தேய்கிறேன்.."


என்று திருமணத்திற்கு ஏங்கும், திருமண வயதை கடக்கும் ஆணின் தவிப்பை கவிஞர் மிக அழகாக எழுதியிருப்பார். திருமண வயதை கடந்தும் திருமணம் ஆகாத ஒவ்வொருவருக்கும், தன் காதல் துணையை பிரிந்து எப்போது மீண்டும் சேர்வோம் என்று காத்திருப்பவர்களுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம் ஆகும். அடுத்த தொடரில் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கலாம்.


மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 14: தம்பிகள் மீது அண்ணன் கொண்ட பாசத்தை சொல்லும் "ஒரு கூட்டுக் கிளியாக"


மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 13: காத்திருப்பின் வலியைச் சொல்லும் "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி"