சாந்தகுமாரின் படைப்புலகம்
புகழ்பெற்ற அமெரிக்க இயக்குநர் டெரன்ஸ் மலிக். The thin red line , Tree of life , the hidden life போன்ற மிகச் சிறந்த படங்களை இயக்கியிருக்கிறார். மனிதர்களின் வாழ்க்கையில் கடவுளின் பங்கு , பிறப்பு, இறப்பு , மகிழ்ச்சி , சோகம் இவை எல்லாம் மனிதர்களுக்கு என்னவாக இருக்கின்றன போன்ற அடிப்படையான கேள்விகளுக்கு எல்லாம் தத்துவார்த்தமான விளக்கம் ஒன்றை தேடும் முயற்சியாக இவரது படங்களை புரிந்துகொள்ளலாம். ஒரு படத்தின் காட்சியையும் அதில் இருக்கும் உரையாடல்களை மட்டும் பார்த்தே கூட சொல்லிவிடலாம் இது டெரன்ஸ் மலிக் இயக்கிய படம் என்று. இப்படி ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். இவர்களுக்கு சினிமா என்பது முதன்மையாக பணம் சம்பாதிப்பதற்காகவோ , புகழடைவதற்காகவோ அடுத்தடுத்து உற்பத்தி செய்யும் ஒரு பொருள் இல்லை.
தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கையின் மீது அவர்களுக்கு இருக்கும் புரிதல் அதன் மேல் அவர்கள் எழுப்பும் கேள்விகள் தான் இவர்களின் படங்கள்.
வெகுஜனப் படங்களில் வெகுசிலரிடம் மட்டும் நாம் இந்த அம்சங்களைப் பார்க்கலாம். சாந்தகுமாரின் படங்கள் அப்படியானவை. ஒரு தனிநபராக வாழ்க்கையின் மீது தனக்கு இருக்கும் அனுமானங்களையும், தனது தத்துவ பார்வைகளையும் முன்வைப்பவையாக இருக்கின்றன அவர் படங்கள். ஆன்மீகம் , தர்க்கம் , வாழ்க்கையின் மீதான அதீத பற்று ஆகிய அம்சங்கள் இவரது படங்களின் பொதுக் கதையாடல்களாக இருக்கின்றன.தற்போது வெளியாகியிருக்கும் ரசவாதியும் அப்படியான ஒரு படமே. ரசவாதி படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.
ரசவாதி விமர்சனம்
கொடைக்கானலில் சித்த வைத்தியசாலை ஒன்றை நடத்தி வருகிறார் அர்ஜூன் தாஸ் . அங்கு இருக்கும் ஒரு சுற்றுலா பயணிகளுக்கான ரெஸார்ட்டில் மேனேஜராக வேலைக்கு சேர்கிறார் நாயகி தான்யா ரவிச்சந்திரன். இதே கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு புது இன்ஸ்பெக்டராக வந்து சேர்கிறார் வில்லன் சுஜித் சங்கர்.
வில்லன் என்றால் அர்ஜூன் தாஸின் காதலுக்கு வில்லன். தொடக்கத்தில் இருந்தே மர்மமான ஒரு கதாபாத்திரமாக இருக்கும் வில்லன் அர்ஜூன் தாஸின் காதலை ஏன் பிரிக்க நினைக்கிறார்? அர்ஜூன் தாஸின் கடந்த காலத்திற்கும் இந்த புதிய இன்ஸ்பெக்டருக்கும் என்ன பகை என்பதை நிதானமான திரைக்கதையில் மிக நேர்த்தியான காட்சியமைப்புகளுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
படம் எப்படி?
ரசவாதி படத்தின் காட்சிகள் செல்லும் வேகம் விறுவிறுப்பை ரசிக்கும் ஆடியன்ஸுக்கு கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் கொஞ்சம் நிதானமாக படத்தை பார்க்க முயற்சித்தால், ஒரு கதையை அதில் ஒவ்வொரு காட்சிகளையும் எவ்வளவு சுவாரஸ்யப்படுத்த முடியும் என்பதை செய்துகாட்டியிருக்கிறார் இயக்குநர்.
மேலும் ஹீரோ வில்லனின் கதையாக இல்லாமல் இரு பக்கங்களில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு இடையில் இருக்கும் உளவியல் வேறுபாடுகளை முழுமையாக வடிவமைத்திருக்கிறார். குறிப்பாக வில்லாக நடித்த சுஜித் கதாபாத்திரத்திற்கு பின்கதை , உடல்மொழியிலும் சரி , அவ்வப்போது செய்யும் வித்தியாசமான முகபாவனைகள் என மனநல பாதிபிற்குள்ளாகிய ஒருவரின் கதாபாத்திரத்தை நாம் புரிந்துகொள்ள பல திறப்புகள் இருக்கின்றன.
"எனக்கு யாரும் சந்தோஷமா இருந்தாலே பிடிக்கிறது இல்ல" என்று அவர் சொல்லும்போது காமெடியாக இருந்தாலும் அதன் பின் இருக்கும் அர்த்தம் பெரிது.
அர்ஜூன் தாஸின் லுக் அவரது ஆடை தேர்வுகள் , மிகையற்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது என கச்சிதமான பொருந்தியிருக்கின்றன. அர்ஜூன் தாஸ் நடித்த முந்தைய படங்களான அநீதி , போர் ஆகிய பாடங்களில் அதிக உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருப்பார். இப்படத்திலும் அதே மாதிரியான ஒரு கதாபாத்திரம்தான் என்றாலும் ஒரு சின்ன வித்தியாசம் என்னவென்றால் இப்படத்தில் அர்ஜூன் தாஸின் கதாபாத்திரம் அவ்வப்போது பேச்சில் ஒரு ஹாசியத்தை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கிறது . அந்தத்தன்மை அர்ஜூன் தாஸின் குரலில் சிறப்பாக வெளிப்பட்டாலும் ரியாக்ஷனிம் மிஸ் ஆகிறது.
கதாநாயகியாக வரும் தான்யா ரவிச்சந்திரன் மற்றும் ரேஷ்மா வெங்கடேஷ் ஆகிய இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. சாந்தகுமாரின் முந்தைய படமான மகாமுனி படத்தில் மஹிமா நம்பியாரைப் போலவே தோற்றமளிக்கிறார் தான்யா. சாந்தகுமார் வாழ்க்கையில் தாக்கம் செலுத்திய அந்த பெண் யாரோ.. இரு நாயகிகளுக்கும் தனித்துவமான பாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றபடி தனித்துவமான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்கள். இரண்டாம் பாதியில் ரேஷ்மா தனது நாட்டியத்தால் கூடுதல் கவனம் பெறுகிறார்
குத்துப்பாட்டு சத்தத்தை மட்டுமே பலமாக கொண்ட தமனின் பின்னணி இசை ரசவாதி படத்தில் புதுமையான அனுபவமாக இருக்கிறது. ஹீரோ ஹீரோயின் இன்ட்ரோவில் பாடல்களுக்கு பதிலாக வெறும் பின்னணி இசையை மட்டும் பயன்படுத்தி காட்சியில் புதுமையை செய்திருக்கிறார். சூழல்கள் மாற மாற அதில் கதையின் மர்மமான தன்மையை காட்டும் வகையில் ஒளிப்பதிவு அமைந்திருக்கிறது.
மைனஸ்
படத்தின் நீளம் ஒரு மைனஸ். படத்தின் இறுதிக்காட்சி வரை கதைசொல்லி முடிபதற்கான நிதானத்தை எடுத்துக் கொள்வதால் ஒரு கட்டத்திற்கு மேல் பார்வையாளர்கள் பொறுமை இழபதை கவனிக்க முடிந்தது. மேலே சொன்னது போல் சாந்தகுமாரின் வாழ்க்கைப் பற்றிய பார்வைகளே இப்படத்திலும் அதிகம் இடம்பெற்றுள்ளன. இந்த பார்வைகள் சில கண்டறிந்த அனுபவங்களாகவும் , சில இன்றைய அறிவியல் தளத்தில் நடக்கும் விவாதங்களாக இருக்கின்றன. ஆனால் பிரச்சனை என்னவென்றால் இந்த விஷயங்களை எல்லாம் பேசும் கதாபாத்திரங்கள் நாம் தினசரி வாழ்க்கையில் பார்க்கும் மனிதர்கள் கிடையாது. அவர்கள் பேசுவது , சின்ன சின்ன விஷயங்களுக்கு அவர்கள் கொடுக்கும் விளக்கங்கள் பெரிய அர்த்தங்களைக் வைத்திருந்தாலும் ஒரு விதமான விலகலை ஏற்படுத்துகின்றன. இந்த மாதிரியான கதாபாத்திரங்களை அவர்களை சுற்றியிருப்பவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது இல்லாமல் மாறாக அவர்களை புழந்து ஏற்றுக்கொள்பவர்களாக இருப்பது படத்தின் நம்பகத் தன்மையை குறைக்கிறது. தனது கருத்துக்களை தொடர்ந்து ஐடியலைஸ் செய்துகொண்டே இருக்கிறார் இயக்குநர். இன்னும் சில நேரங்களில் பழமைவாதமாகவும் சில கருத்துக்கள் இருக்கின்றன. இந்த காலத்தில் 7 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் அதற்கு நீ உன் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஹீரோ ஹீரோயினிடம் சொல்வதற்கு என்ன அறிவியல் வியாக்கியானம் தரப்போகிறார் இயக்குநர்.
தொடக்கத்தில் இருந்தே நாயகன் வில்லன் ஆகிய இருவருக்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டை நாம் பார்க்கிறோம். இரு தரப்பில் இயக்குநர் யார் சார்பையும் எடுப்பதுல்லை. ஆனால் இந்த இருவர் கடைசியாக சந்தித்துக் கொள்ளும் தருணத்தை ஏதோ ஒரு வகையில் நாம் ஆர்வமாக எதிர்பார்க்கிறோம். ஆனால் வழக்கமான ஹீரோ வில்லன் படங்களுக்கு கொடுக்கும் க்ளைமேக்ஸ் மாதிரி சாதாரணமாக முடித்துவிடுகிறார்கள். அவ்வளவு நேரம் படிப்படியாக கட்டமைக்கப் பட்ட அர்ஜூன் தாஸின் கதாபாத்திரம் பொருளிழந்து போகிறது.
நிச்சயமாக சாந்தகுமாரின் ரசவாதி ஒரு தனித்துவமான குரல். மிக நுட்பமான காட்சியமைப்புகள் கைகூடும் அவர் தனது கருத்துக்களை இனிவரக் கூடிய படங்களில் இன்னும் கொஞ்சம் நுணுக்கமான திரைமொழியில் சொல்வார் என்று எதிர்பார்க்கலாம்