உறவுகளை பொறுத்தவரை காத்திருப்பும், பொறுமையும், விட்டுக்கொடுத்தலும் மிக மிக அவசியம் ஆகும். குறிப்பாக, ஒருவரை விரும்பி அவரை மணமுடிக்க ஆசைப்பட்டால் அவரை தொந்தரவு செய்யாமல் காத்திருந்து அவரது சம்மதம் பெற்று திருமணம் முடிப்பது என்பது மிக மிக முக்கியமான விஷயமாக, உறவுகளில் கருதப்படுகிறது. அதுவரை பிரிந்து இருப்பது என்பதையும், அவரது சம்மதத்திற்காக வேதனையுடன் காத்திருப்பதையும் ஏற்றுக்கொண்டுதான் தீர வேண்டும்.


காத்திருப்பின் வலி:


காதலனோ, காதல் துணையோ தன்னுடைய காதல் துணையை சேருவதற்காக காத்திருக்கும் காலகட்டமானது மிக அவஸ்தையாக கருதப்படுகிறது. இது காதலர்கள் மட்டுமின்றி கணவனை பிரிந்து வாழும் மனைவிக்கும், மனைவியை பிரிந்து வாழும் கணவனுக்கும் பொருந்தும். இதுபோன்ற ஒரு காத்திருப்பின் தவிப்பை, காத்திருப்பின் வேதனையை சொன்ன பாடல் காத்திருந்து காத்திருந்து. வித்தக கவிஞர் வாலி,  தனது அற்புதமான வார்த்தைகளால் இந்த பாடலை எழுதியிருப்பார். வைதேகி காத்திருந்தாள் படத்தில் இடம்பெற்றுள்ளது காத்திருந்து காத்திருந்து பாடல்.


காத்திருப்பிலே போகும் காலம்:


இளையராஜாவின் இசையில் உருவான இந்த பாடல், தனது காதலியை நினைத்து காதலன் பாடுவது போல படமாக்கப்பட்டிருக்கும். கவிஞர் முதல் வரியிலே,


"காத்திருந்து காத்திருந்து..


காலங்கள் போகுதடி..


பூத்திருந்து பூத்திருந்து..


பூவிழி நோகுதடி.."


என்று எழுதியிருப்பார்.


நீ எப்போது வருவாய் என்று எதிர்பார்த்து என்னுடைய காலங்கள் கழிந்து கொண்டே இருக்கிறது என்றும், உன் வரவை எதிர்பார்த்தே எனது கண்களும் நொந்து போய்விட்டது என்றும் வாலி காதலனின் வேதனையை நமக்கு கடத்தியிருப்பார்.


ஆசைகள் வேகுதடி:


அதற்கு அடுத்த வரிகளில்,


"நேத்து வரை சேர்த்து வச்ச..


ஆசைகள் வேகுதடி..


நீ இருந்து நான் அணைச்சா..


நிம்மதி ஆகுமடி"


என்று எழுதியிருப்பார்.


இந்த வாழ்க்கையை உன்னுடன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று என் மனதில் வளர்த்து வைத்திருந்த ஆசைகள், உள்ளத்திலே வெந்து போகிறது என்றும், நீ என் அருகில் இருந்து உன்னை என் வேதனைகளுக்கு ஆறுதலாக கட்டியணைத்துக் கொண்டால் நிம்மதியாக இருக்கும் என்றும் காதலனின் வேதனையை வாலி வரிகளாக மாற்றியிருப்பார்.


முத்துச்சிப்பி நீதானே:


அதற்கு அடுத்த வரிகளில்,


"முக்குளிச்சு நானெடுத்த


முத்துச்சிப்பி நீதானே..


முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள..


பத்திரமா வெச்சேனே..


வெச்சதிப்போ காணாம


நானே தேடுறேன்..


ராத்திரியில் தூங்காம


ராகம் பாடுறேன்.."


என்று எழுதியிருப்பார்.


கடலில் மூழ்கி மூச்சை அடைத்தால் மட்டுமே முத்து எடுக்க முடியும். கிடைக்கும் அனைத்து சிப்பிகளுக்குள்ளும் முத்து இருக்காது. அவ்வாறு எனக்கு அரிதிலும் அரிதாக கிடைத்த முத்தே, உன்னை என் நெஞ்சிலே பாதுகாப்பாக வைத்திருந்தேன். ஆனால், இப்போது நீ இல்லை. உன்னைத் தொலைத்து விட்டேன். உன்னை தேடித் தேடி, இரவில் தூக்கத்தை தொலைத்து நான் இப்படி பாடிக் கொண்டிருக்கிறேன் என்று காதலனின் வேதனையை மிக அழகாக மேலே கூறியவாறு வரிகளாக மாற்றியிருப்பார்.


காதலியை மோகனமாகவும், சீதனமாகவும், தென் மதுரை பூச்சரம் என்று வர்ணித்து, காதலன் கண்ட அத்தனை கனவுகளும் தற்போது கண்ணீராக மாறி நிற்கிறது என்றும் அடுத்த வரிகளில் வாலி எழுதியிருப்பார்.


அத்தனையும் நீதானே:


அதற்கு அடுத்த வரிகளில்,


"நீரு நிலம் நாலு பக்கம்..


நான் திரும்பி பாத்தாலும்..


அந்தப்பக்கம் இந்தப்பக்கம்..


அத்தனை நீயாகும்.."


என்று எழுதியிருப்பார்.


காதலனோ, காதலியையோ பிரிந்து வாழும் காதல் துணைக்கோ, கணவனையோ அல்லது மனைவியையோ பிரிந்து வாழும் துணைக்கோ எப்போதும் அவர்களது ஞாபகம் இருந்து கொண்டே இருக்கும். இதனால், எந்தவொரு செயலின்போதும் அவர்களது ஞாபகம் வந்து கொண்டே இருக்கும். இதைத்தான் நீர், நிலம் என எங்கு பார்த்தாலும், அனைத்து திசையிலும் நீ மட்டுமே தெரிகிறாய் என்று காதலனின் ஏக்கத்தை வாலி எழுதியிருப்பார்.


என் நெஞ்சின் உள்ளே நீங்காமல் வாழ்கிறாய் என்று கூறும் வாலி, அதற்கு அடுத்த வரிகளில்


"ஆலையிட்ட செங்கரும்பா..


ஆட்டுகிற எம் மனச..


யாரவிட்டு தூது சொல்லி..


நான் அறிவேன் உம் மனச..


உள்ளமும் புண்ணாச்சு..


காரணம் பெண்ணாச்சு.."


என்று எழுதியிருப்பார்.


அதாவது, ஆலைகளில் இயந்திரத்தில் போடப்படும் கரும்பை ஆட்டும் இயந்திரம் சுழன்று கொண்டே இருக்கும். அதுபோல என் மனம் உன் நினைவுகளிலே சுழன்று கொண்டிருக்கிறது. நான் இப்படி அவஸ்தைபட, உன் மனதில் என்னதான் இருக்கிறது என்பதை நான் யாரை தூது அனுப்பி அறிந்து கொள்வேன்? என்று கேள்வி எழுப்புவது போல பாட்டை முடித்திருப்பார்.


மிக மிக எளிய வார்த்தைகளை கொண்டு வாலி ஒரு காதலனின் காத்திருப்பின் வலியை மிக அற்புதமாக சொன்ன இந்த பாடல் இன்றளவும் பலரும் ரசிக்கும், இரவில் கேட்கும் பாடல்களில் முதன்மையானதாக உள்ளது. அடுத்த தொடரில் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கலாம்.


மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 11: "இங்கு நீ அங்கு நான் போராட" தேசப்பற்றில் காதலை சொன்ன கப்பலேறி போயாச்சு!


மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 10: "என்ன சொல்ல போகிறாய்?" அவளின் சம்மதத்திற்காக தவிக்கும் அவனின் காதல்!