ஒவ்வொரு உறவுக்கும் ஒரு மகத்துவம் உண்டு. அந்த வகையில் அண்ணன் – தம்பி உறவு என்பது அனைவருக்கும் அமைந்துவிடுவதில்லை. அவ்வாறு அமைந்த அண்ணன் – தம்பி உறவானது மிகப்பெரிய வரமாக கருதப்படுகிறது. அக்கா – தங்கை உறவில் அன்பை பெண்கள் அதிகளவு வெளிக்காட்டிக் கொள்வார்கள். ஆனால், அண்ணன் – தம்பி உறவில் பாசத்தை அந்தளவு வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஆனாலும், அண்ணனுக்கு ஒன்று என்றாலோ, தம்பிக்கு ஒன்று என்றாலோ தாங்கிக் கொள்ள முடியாத உறவாக அந்த உறவு இருக்கும்.


ஒரு கூட்டுக்கிளியாக:


அந்த வகையில், தமிழ் சினிமாவில் அண்ணன் – தம்பி பாசத்தை சொன்ன பல பாடல்களில் எப்போதும் எவர்கிரீனாக இருப்பது ஒரு கூட்டுக்கிளியாக பாடல் ஆகும், ரஜினிகாந்த் நடித்த படிக்காதவன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை வைரமுத்து எழுதியிருப்பார்.


வைரமுத்து எழுதிய இந்த பாடலிலே,


“ ஒரு கூட்டு கிளியாக


ஒரு தோப்பு குயிலாக


பாடு பண் பாடு..


இரை தேட பறந்தாலும்..


திசை மாறி திரிந்தாலும்..


கூடு ஒரு கூடு..”


என்று எழுதியிருப்பார்.


ஒரே தாயின் வயிற்றில் பிறந்த நாம், குயில்களை போல மகிழ்ச்சியாக பாடித் திரிவோம் என்றும், வேலைக்காக, பணிக்காக எங்கு எந்த திசையில் சென்றாலும், பிரியாமல் ஒன்றாகவே சேர்ந்து வாழ வேண்டும் என்று அண்ணன் தம்பி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதையே வைரமுத்து எழுதியிருப்பார்.


அண்ணன் இருக்க தயக்கம் ஏன்?:


அதற்கு அடுத்த வரியில்,


"என்னென்ன தேவைகள்…


அண்ணனை கேளுங்கள்.."


என்று எழுதியிருப்பார்.


அதாவது, தம்பிகள் தங்களுக்கு எந்த தேவைகள் இருந்தாலும், எந்த சூழல் வந்தாலும் உதவி என்று வந்தால் அண்ணனிடம் தயங்காமல் கேளுங்கள். அண்ணன் பார்த்துக் கொள்கிறேன் என்று வைரமுத்து எழுதியிருப்பார். இந்த வரிகள் தம்பிகளுக்கு மட்டுமல்ல தங்கைகளுக்கும் பொருந்தும்.


ஒரு அண்ணன் என்பவன் தனது தம்பிகளுக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும். தம்பிகளை நல்ல வழியில் நடத்த வேண்டும் என்பதை அடுத்த வரிகளில் வைரமுத்து எழுதியிருப்பார். அதாவது, நமது வாழ்க்கை பயணத்தில் சறுக்கல்கள் கண்டிப்பாக வரும். நாம் எதிர்பாராத தருணத்தில், பல இன்னல்கள் வரலாம். ஆனால், அதுபோன்ற வாழ்வின் கடினமான தருணத்திலும் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், தர்மத்தின் பாதையிலே செல்ல வேண்டும் என்றும் ஒரு அண்ணன் தம்பிகளுக்கு போதிக்க வேண்டும்.  இதையே கீழ்க்கண்ட வரிகளாக,


“ நேர்மை அது மாறாமல்..


தர்மம் அதை மீறாமல்..


நாளும் நடைபோடுங்கள்..


ஞானம் பெறலாம்..”


என்று எழுதியிருப்பார்.


இயற்கையின் விதிப்படி, நாம் என்ன செய்கிறோமோ அதற்கான பலனை நாம் அனுபவிக்க வேண்டும். தர்மத்தின் வழி நடக்கும்போது சரியான நேரத்தில் தர்மம் நம்மை காக்கும் என்றே பல நூல்கள் நமக்கு போதித்துள்ளது. தந்தை ஸ்தானத்தில் உள்ள அண்ணன் அதையே தனது தம்பிகளுக்கும் போதிக்க வேண்டும்.


இதையே,


“ சத்தியத்தை நீ காத்திருந்தால்..


சத்தியம் உங்களை காத்திருக்கும்..


தாய் தந்த அன்புக்கும்


நான் தந்த பண்புக்கும்


பூ மாலை காத்திருக்கும்"


என்று வைரமுத்து எழுதியிருப்பார். மேலும், சத்தியத்தின் வழியில் நடந்தால் கண்டிப்பாக பூ மாலைகள் நமது தோள் வந்து சேரும் என்றும் எழுதியிருப்பார்.


அதை போலவே, நாம் என்ன விதைக்கிறோமா, அதைத்தான் அறுவடை செய்வோம் என்பதையும், உழைக்காமல் எதுவுமே கிடைக்காது என்பதையும் அடுத்த வரிகளில்


"நெல்லின் விதை போடாமல்


நெல்லும் வருமா..


வியர்வை அது  சிந்தாமல்..


வெள்ளிப் பணமா..?"


என்று அருமையாக எழுதியிருப்பார்.


அதற்கு அடுத்த வரிகளில்,


ஏதோ வாழ வேண்டும் என்று வாழக்கூடாது. அடுத்தவரின் நன்மைகளுக்காக வாழ்வது ஒன்றும் தவறு இல்லை. உங்களின் சிறப்பான வாழ்க்கையை கண்டு அண்ணன் ஆனந்த கண்ணீர் சிந்துவேன் என்றும், ஆனால் என் கண்களில் ஈரம் இல்லை என்றும் மிக அற்புதமாக தனது வரிகளால் வைரமுத்து அண்ணன் பாசத்தை நெகிழ்ச்சியுடன் நமக்கு கடத்தியிருப்பார். அந்த வரிகளே..


"பேருக்கு வாழ்வது


வாழ்க்கை இல்லை..


ஊருக்கு வாழ்வதில்..


தோல்வி இல்லை..


ஆனந்த கண்ணீரில் அபிஷேகம்..


நான் செய்தேன்..


என் கண்ணில் ஈரமில்லை.."


என்று எழுதியிருப்பார்.


தம்பிகள் மீது அண்ணன் கொண்ட பாசத்தை மிக நெகிழ்வுடன் சொன்ன இந்த பாடலுக்கு இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவன் உயிர் கொடுத்திருப்பார்.


மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 13: காத்திருப்பின் வலியைச் சொல்லும் "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி"


மேலும் படிக்க:  ஆஹா என்ன வரிகள் 12: "நேரில் நின்று பேசும் தெய்வம்" தாயைப் போற்றி வணங்கும் மகனின் பாசம்!