மக்களவைத் தேர்தல் நடைபெறும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மத்தியில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க. நாடு முழுவதும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.


மக்களவைத் தேர்தல்:


பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றனர். பா.ஜ.க.விற்கு தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் மிகுந்த செல்வாக்கு இருப்பதால், அங்கு அவர்களை வீழ்த்தினால் மட்டுமே மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று இந்தியா கூட்டணி தனது செயல்பாட்டை வட இந்தியாவில் தீவிரப்படுத்தியுள்ளது.


நாட்டிலே அதிகபட்ச மக்களவைத் தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் – சமாஜ்வாதி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்த நிலையில், உத்தரபிரதேச மக்களின் வாக்குகளை கவர்வதற்காக அங்கு காங்கிரஸ் புது வியூகத்தை கையில் எடுத்துள்ளது.


கிருஷ்ணர் வேடத்தில் ராகுல் காந்தி:


அதாவது, அங்குள்ள கந்தகர் நகரத்தின் கன்டோன்மெண்ட் பகுதியில் உள்ள மால் சாலையில் ராகுல் காந்தியை கிருஷ்ணராக சித்தரித்தும், அந்த மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்ராயை அர்ஜூனராக சித்தரித்தும் பேனர் அடிக்கப்பட்டுள்ளது. மகாபாரதத்தில் அர்ஜூனருக்கு தேரோட்டியாக கிருஷ்ணர் போரின்போது செயல்படுவார். அதேபோல, உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய்க்காக இந்த மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணர் போல ராகுல் காந்தி செயல்படுகிறார் என்பதை விளக்கும் வகையில் இந்த பேனர் அடிக்கப்பட்டுள்ளது.


இந்த போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேசத்தை யார் கைப்பற்றுகிறார்களோ அவர்களே மத்தியில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். ஏனென்றால், 80 தொகுதிகள் என்பது ஆட்சியை மாற்றும் என்பதால் உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளை கைப்பற்ற பா.ஜ.க.விற்கும் இடையேயும், சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையேயும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.


காங்கிரஸ் - சமாஜ்வாதி:


உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் – சமாஜ்வாதி இடையேயான தொகுதி பங்கீடு இன்று உறுதி செய்யப்பட்டது. உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 62 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். அதேசமயம், உத்தரபிரதேசத்தில் ஆளுங்கட்சியாக உள்ள பா.ஜ.க. 80 தொகுதிகளையும் தங்கள் வசமாக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை அவர்கள் தங்கள் தேர்தல் பரப்புரையில் முக்கிய நிகழ்வாக பயன்படுத்தி வருகின்றனர். 


மேலும் படிக்க: ஏமாற்றிய காதலன்; ஆட்சியர் காலில் விழுந்து கதறிய இளம்பெண் - மயிலாடுதுறையில் சோகம்


மேலும் படிக்க: Salem Corporation Budget: மக்கள் மீது வரியை திணிக்கும் பட்ஜெட்; சேலத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு