மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அசிக்காடு ஊராட்சி செங்குடி கிராமம் தெற்கு தெருவை  சேர்ந்த பொண்ணையன் என்பவரின் மகள் 26 வயதான சுகப்பிரியா. இவர் சென்னையில் நர்சிங் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதி மேலத்தெருவை சேர்ந்த அழகர்சாமி என்பவரின் 29 வயதான மகன் வினோத் வெளிநாட்டு வேலை பார்த்து வந்தவர் தற்போது  டாடா ஏசி வாகனம் ஓட்டு வருகிறார். இந்நிலையில் சுகப்பிரியா வினோத் இவர்கள் இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 




இந்த நிலையில்  சுகப்பிரியாவை திருமணம் செய்து கொள்வதாக வினோத் ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாண்டிச்சேரி, வேளாங்கண்ணி, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு அழைத்துச் சென்று இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.  இதனால் இரண்டு முறை கரு கலைப்பு செய்ததாக கூறும் சுகப்பிரியா, மூன்றாவது முறையாக கர்ப்பம் ஆகிய நிலையில் கடந்த ஆண்டு நவம்பம் மாதம் தாலி கட்டி தன்னை ரகசிய திருமணம் செய்து கொண்ட காதலன் வினோத், கர்ப்பிணிகளுக்கு  தரும் சத்து மாத்திரை என்று  கூறி கருகலைப்பு மாத்திரையை ஏமாற்றி வாங்கி தந்து அதனை என்னை சாப்பிட வைத்து தன்னை ஏமாற்றி வயிற்றில் வளர்ந்த 3வது கருவை கலைத்து விட்டதாகவும். தற்போது என்னை நிராகத்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய முயல்வதாக மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 




புகார் அளித்து 56 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை புகார் குறித்து மகளிர் காவல் நிலையத்தில் எவ்வித  நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள சுகப்பிரியா,   வினோத் வீட்டிற்கு சென்று வாசலில் அமர்ந்து நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை சொல்லமாட்டேன் என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து வினோத் வீட்டில் இருந்த பெற்றோர்கள் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்ட நிலையில், வீட்டின் வாசல் கேட் பூட்டை உடைத்து உள்ளே சென்றதாக காவல்நிலையத்தில் வினோத் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பெரம்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். 




இந்நிலையில் மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் காதலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் இருவரையும் சேர்த்து வையுங்கள் என்று கூறியதன் பேரில் இரு குடும்பத்தாரும் பேச்சுவார்த்தை நடத்த கால அவகாசம் பெற்று சென்றதால் நடவடிக்கை எடுக்காமல் நிறுத்தி வைத்ததாக கூறிய போலீசார், சுகப்பிரியா காதலன் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் வினோத்தை கைது செய்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுதல்  420, 417 ஆகிய சட்டபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று முன்தினம் சிறையிலடைத்தனர்.




இந்நிலையில் தன்னை காதல் கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத மகளிர் காவல் ஆய்வாளர் நாகவல்லி, எதிர் தரப்பு அரசு வழக்கறிஞர் சிவதாஸ் மற்றும் வினோத்தின் தாய், சகோதரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுகப்பிரியா தனது குடும்பத்தாருடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அந்தப் பெண் மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து கதறி அழுதார். இதையடுத்து, காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார். இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.