இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக முதற்கட்டத்திலே வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், பிற மாநிலங்களில் பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.


மக்களவைத் தேர்தல்:


தெலங்கானாவில் அமைந்துள்ளது நிசாமாபாத் மக்களவைத் தொகுதி. இந்த தொகுதியில் அந்த மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ் சார்பாக ஜீவன் ரெட்டி போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு வரும் மே 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


நிசாமாபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ஜீவன் ரெட்டி தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில், இன்று அந்த தொகுதிக்குட்பட்ட அர்மூர் சட்டசபைக்குட்பட்ட கிராமம் ஒன்றில் தனது ஆதரவாளர்களுடன் ஜீவன் ரெட்டி வாக்கு சேகரித்தார். அப்போது, ஒரு வயதான பெண்மணியிடம் காங்கிரசுக்கு வாக்கு அளிக்குமாறு கூறியுள்ளார்.


கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் வேட்பாளர்:


ஆனால், அந்த பெண்மணி சமீபத்தில் தெலங்கானாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்கு அளித்ததாகவும், ஆனால் தனக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், இதனால் வரும் மக்களவைத் தேர்தலில் தாமரைக்குத்தான் வாக்களிப்பேன் என்று கூறியுள்ளார். அப்போது, அவருடன் கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த, வினய்குமார் ரெட்டி உடனிருந்தார்.






இதனால், ஆத்திரமடைந்த ஜீவன் ரெட்டி அருகில் இருந்த வினய்குமார் ரெட்டியை கை காமித்து அந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். இதில், அந்த வயதான பெண் அதிர்ச்சியில் உறைந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வேறு கட்சிக்கு ஓட்டுப்போடுவேன் என்று கூறிய பெண்ணை காங்கிரஸ் வேட்பாளர் கன்னத்தில் அறைந்ததற்கு பலரும் கண்டனத்தை கூறி வருகின்றனர்.


மேலும் படிக்க: Fact Check: மாநில தலைவர் பதவிக்கு குறி? பாஜகவில் ஐக்கியமாகும் அதிமுகவின் செங்கோட்டையன்? உண்மை என்ன?


மேலும் படிக்க: அச்சச்சோ! சிவசேனா தலைவருக்காக சென்ற ஹெலிகாப்டர் - தரையில் விழுந்து நொறுங்கிய பரிதாபம்