Fact Check: அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான செய்தியின் உணமைத் தன்மை குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
இணையத்தில் பரவும் செய்தி:
அதிமுக மூத்தத்தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனுக்கும், அக்கட்சியின் மூத்த தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் தினகரன் நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மாநிலத் தலைவர் பதவி கொடுத்தால் பாஜகவில் சேர செங்கோட்டையன் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது. இச்செய்தியை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, இதுகுறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். தமிழக அரசியலில் முக்கிய நபராக உள்ள செங்கோட்டையன் தொடர்பாக, சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மைத் தன்மை என்ன?
மாநிலத் தலைவர் பதவி தந்தால் பாஜகவில் சேர முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முடிவெடுத்துள்ளதாக, தினகரன் செய்தி வெளியிட்டிருந்ததை தொடர்ந்து இணையத்தில் தேடினோம். அதன் முடிவில் இச்செய்தி பொய்யான செய்தி என்றும், இச்செய்தியை வெளியிட்ட பத்திரிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் செங்கோட்டையன் கூறிய மறுப்பு செய்தி, 24×7 செய்தியின் யூடியூப் பக்கத்தில் பகிர்ந்திருந்ததை காண முடிந்தது. இதுதவிர்த்து வேறு சில ஊடகங்களிலும் இதுக்குறித்து செய்தி வெளிவந்திருந்தது.
தொடர்ந்து தேடுகையில், செங்கோட்டையன் பாஜகவில் சேர இருப்பதாக வெளியான தகவலை மறுத்து, அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்து இருந்தார். அதில், “என்னைப்பற்றி அவதூறாகவும், உண்மையில்லாத வகையிலும் பத்திரிக்கையில் செய்திகள் வெளியிட்டதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இது போன்ற ஆதாரமில்லாத செய்திகளை பத்திரிகை தர்மத்திற்கு எதிராக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்” என குறிப்ப்ட்டு இருந்தார். அஇஅதிமுகவின் அதிகாரப்பூர்வ ஐடி விங் பக்கத்திலும், செங்கோட்டையன் பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான தகவல் பொய்யானது என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.
தீர்ப்பு:
ஆய்வின் முடிவில், மாநிலத் தலைவர் பதவி தந்தால் பாஜகவில் சேர முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முடிவெடுத்துள்ளதாக தினகரன் வெளியிட்ட செய்தி தவறானது என்பது உறுதியாகியுள்ளது. இது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவாகியுள்ளது. ஆகவே பொதுமக்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
கூடுதல் விவரங்களுக்கு: மாநிலத் தலைவர் பதவி தந்தால் பாஜகவில் சேர முடிவெடுத்துள்ளாரா செங்கோட்டையன்?
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக newschecker என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை சற்றே திருத்தி எழுதியுள்ளது.