தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப் பகுதிகளில் புள்ளிமான், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் இருந்து வருகின்றன. வனப் பகுதியில் உள்ள விலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வனப் பகுதியிலேயே கிடைக்க வனத் துறையினர் தண்ணீர் தொட்டி அமைத்து தினம் தோறும் தண்ணீரை நிரப்பி வருகின்றனர். ஆனால் கோடை காலங்களில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் பொழுது, வன விலங்குகள் ஊருக்கு நுழைவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால், தற்பொழுது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தருமபுரி மாவட்டம் முழுவதுமாக வறண்டு காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள குளம் குட்டைகள் தொட்டி தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டு வருகிறது. இதனால் வனப் பகுதியில் உள்ள விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பகல் நேரங்களிலேயே புள்ளிமான், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் வனப் பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்களுக்குள் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக நுழைந்து வருகிறது.
இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி நகர் பகுதியில் மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று காலை புள்ளிமான் ஒன்று உணவு மற்றும் தண்ணீர் தேடி நுழைந்துள்ளது. அதனை கண்ட தெரு நாய்கள் புள்ளிமானை துரத்தி கடித்துள்ளது. அப்பொழுது புள்ளிமான் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, ஆதவன் என்பவரது வீட்டிற்குள் தஞ்சம் அடைந்தது. புள்ளிமான் ஓடி வந்ததை அறிந்த மக்கள், நாய்களை துரத்தி விட்டு, மானை பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து அதிர்ச்சியில் இருந்த புள்ளி மானுக்கு, அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி முதலுதவி சிகிச்சை கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து மொரப்பூர் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்து, புள்ளிமானை பாதுகாப்பாக வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் புள்ளிமானுக்கு லேசான காயம் இருப்பதால், அதற்கு உரிய சிகிச்சை அளித்து பாதுகாக்குமாறும் வனத் துறையினரிடம் மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். தொடர்ந்து புள்ளிமானை வனப் பகுதியிலேயே வைத்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் காரில் எடுத்துச் சென்றனர். மேலும் அடிக்கடி வன விலங்குகள் ஊருக்குள் நுழைந்து வரும் நிலையில் அதனை தடுப்பதற்கு வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.